Latest News: இந்திய அணியில் விளையாடியிருந்தால் 1000 விக்கெட்களை எடுத்திருப்பேன் - பாகிஸ்தான் பந்துவீச்சாளர்
Tamil news: பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட இருக்கின்றது. அக்டோபர் 15ம் திகதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தாலும், அந்நாடு இந்தியாவில் வந்து விளையாடுவதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கொடுக்கவில்லை.
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து, அந்நாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு விடயங்களை உறுதிசெய்த பின்னரே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் பந்துவீச்சாளரான சயீத் அஜ்மல் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தால் நிச்சயம் தான் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் என்றும், ஆனால் அதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு பல முட்டுக்கட்டைகளை போட்டுவிட்டனர் என்றும் ஆதங்கமாக பேசியுள்ளார்.
சயீத் அஜ்மல் புலம்பல்
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார் சயீத் அஜ்மல். உலக கிரிக்கெட்டில் அபாரமான பந்துவீச்சாளராகவும் இருந்த அவரின் பந்துவீச்சில் திடீரென சந்தேகம் ஏற்பட்டதால் அவருக்கு ICC தடை விதித்தது. தடை விதிக்கப்படும்போது சயீத் அஜ்மல், ஒருநாள் மற்றும் T20 தரவரிசையில் உலகின் No 1 பந்துவீச்சாளராகவும் இருந்தார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும், 64 T20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் சயீத் அஜ்மல் வீழ்த்தியிருந்தார்.
1000 விக்கெட் வீழ்த்தியிருப்பேன்
நாதிர் அலியின் போட்காஸ்டில் சயீத் அஜ்மல் பேசும்போது,
"உண்மையைச் சொல்வதானால், நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருந்தால், ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன். நான் ஒரு பந்து வீச்சாளராக ஒவ்வொரு ஆண்டும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன். ஐசிசி தடை விதித்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் பந்து வீச்சில் சந்தேகம் இருந்தால் நான் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கியபோது என்னை தடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து 400 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்தபிறகு எனக்கு தடை விதித்தை எப்படி ஏற்றுக் கொள்வது?"
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் விக்கெட் மறக்க முடியாது
"இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது பல மறக்க முடியாத நினைவுகள் இருக்கின்றன. அதில் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் விக்கெட்டை எடுத்தேன். அவர் என்னுடைய பந்தில் ஆட்டமிழந்ததை என்னால் மறக்க முடியாது. ஆனால் 3வது நடுவர் அதனை அவுட் இல்லை என கூறினார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது அவுட் தான்"
என தெரிவித்துள்ளார்.