Latest news: வாகனம் தட்டிவிட்டதில் 6 மாத பிள்ளையின் தந்தை பலி!
tamil news: கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் பலியானதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(09.02.2024) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் 4 ஆம் குறிச்சியைச் சேர்ந்த சண்முகராசா சுதர்ஷன்(வயது 37) என்பவரே பலியாகியுள்ளார்.
நகைக் கடை கூலித் தொழிலாளியான இவர் 4 வயதைக் கொண்ட ஒரு குழந்தைக்கும், 6 மாத கைக்குழந்தைக்கும் தகப்பன் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துப் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று குடும்பத் தலைவரான சுதர்ஷன், மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியால் சென்று கொண்டிருக்கும் வேளையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'படி' ரக வாகனத்தைக் கடக்கும்போது குறித்த வாகனத்தின் சாரதி திடீரென வாகனத்தின் கதவைத் திறந்துள்ளார்.
வாகனக் கதவின் பலமான தள்ளுகையினால் வீதியில் நிலை தடுமாறி விழுந்த அவரை பின்னால் வந்த மற்றொரு 'படி' ரக வாகனம் ஏறி மிதித்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உதவிக்கு விரைந்தோரினால் உடனடியாக எறாவூர் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட;ட நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று(11.02.2024) ஐயன்கேணி மணியபுரம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் 'படி' ரக வாகனங்களின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ள காவல்துறை தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*