வடக்கில் 19% சிறுவர்கள் மனநிலை பாதிப்பில் உள்ளனர்!!!
tamil news: வடக்கு பிராந்தியத்தில் நோய்வாய்ப்படும் சிறுவர்களில் சுமார் 19% பேர் மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்களாக உள்ளனர்.
அதாவது சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினுடைய 2019ம் ஆண்டு உத்தியோகபூர்வ புள்ளிவிபரத்திலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணத்தை பெற்றுக்கொள்ள Click செய்யவும்
இதனையடுத்து இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசகரான மனநல மருத்துவர் சிவதாஸ் சிவசுப்ரமணியம் அவர்களை எமது ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,
"அரச பதிவுகளுக்கு வந்த குறித்த சிறுவர்களின் எண்ணிக்கை 19% எனில், சமூகத்திலும் அதே அளவில்/ அதற்கும் அதிகமாகவே காணப்படும்"
என குறிப்பிட்டார்.
தொடர்ந்து,
"2009 போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இதர மருத்துவ உதவிகளை வழங்கப்பட்ட அளவிற்கு அரசினால் உளவளச் சிகிச்சை வழங்கப்பட்டதா?"
என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்,
"நிச்சயமாக இல்லை. அதற்கான போதிய வசதிகள் அரசின் வசம் இல்லை என்பதோடு, அரசு அந்த விவகாரத்தினை பொதுச்சுகாதாரம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பதே உண்மை."
எனவும் குறிப்பிட்டார்.
குறித்த பதிலையடுத்து,
"உளவளசிகிச்சையின் போது போரால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வெளிப்படும் விடயங்கள் இலங்கையரசுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு வலுச் சேர்க்குமா?"
என கேட்டபோது,
"ஆரம்பத்தில் அதற்குரிய வாய்ப்புகள் இருந்ததாகவும், தற்சமயம் இலங்கையரசு போர்க்குற்றம் நடக்கவில்லை என நிறுவியிருக்கும் கோட்பாட்டின் கீழ் வாய்ப்பு இல்லை. தற்சமயம் உளவளசிகிச்சை வழங்கமுடியும்."
எனவும் குறிப்பிட்டார்.
மேலும்,
"மன அழுத்தமும், தற்கொலை உணர்வுகளும் பரம்பரைகளுக்கு கடத்தப்படுமா?, போரிற்கு பிந்திய சூழலில் வடக்கில் குடும்ப வன்முறைகளும், தற்கொலைகளும் அதிகமாக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?"
என கேட்டபோது,
"ஆம், கடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது."
எனவும்,
"தமிழ் சமூகத்தின் சமூக பிணைப்பு உடைந்துள்ளதாலும், போரின் உளவியல் தாக்கத்தாலும் வன்முறைகளும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளன."
எனவும் கூறினார்.
இறுதியாக,
"போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிகம் பணிபுரியாதது ஏன்?"
என வினாவியபோது,
"அவர்களுடைய உளவள சிகிச்சை முறை மேற்கத்தேய நாடுகளுக்கு தான் பொருத்தமானது. அவர்கள் அதனை எங்களுடைய மக்களின் பாதிப்புக்கு ஏற்றதாக மாற்றியமைக்கவில்லை"
என குறிப்பிட்டிருந்தமை கவனத்திற்குரியது.
இவ்வாறான பின்னணியில் 2009 இனவழிப்பின் இரண்டாம்கட்ட தாக்கமாகவே குறித்த சிறுவர்களது மனநிலை பாதிப்பு நிகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாதிப்புக்கு அடுத்தகட்டத்தில் சுவாசம் தொடர்பான நோய்களும், இருதயம் சார் நோய்களும் வடக்கு பிராந்திய சிறுவர்களிடம் காணப்படுகின்றன.