படுகொலை I - ஈழத்தின் மூத்த புனைகதையாசிரியர் சோ. சிவபாதசுந்தரம்
பாலியாற்றங்கரையில் ஐந்து ஏகரா விஸ்தீரணத்திற் சர்க்காருக்குச் சொந்தமான ஒரு சந்தனமரக் காடுண்டு. ஊரவர்கள் திருட்டுத்தனமாக வந்து, சந்தனக் கட்டைகளை வெட்டிக்கொண்டு போய் வியாபாரிகளுக்கு விற்றுப்போடா வண்ணம், சர்க்காரால் நியமிக்கப்பட்டு, இதைக் காவல் செய்பவன், பொடிசிங்கோ என்றவோர் சிங்கள வாலிபன். பொடிசிங்கோவுக்கு இருபது வயது வரையிலிருக்கும்; புதிதாகத்தான் இக்காட்டுக்குக் காவலாளியாக வந்தவன்; ரொம்பத் துணிகரமுள்ளவோர் சிங்களச் சிறுவன்; பகல் முழுவதும், அக்காட்டினுள்ளேயுள்ள குடிசையில் உறங்கிக்கொண்டு கிடப்பான். இராவானதும், துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காடு முழுவதும் சுற்றி வருவான்; பேய், பிசாசு, பூதங்கள் என்றால் அவனுக்கு நம்பிக்கையில்லை. அப்படி யாரேனும் சொன்னால், 'அவைகள் என்னோடு சீட்டாட வருமா?' என்று கேட்கக்கூடிய அத்தனை துணிச்சலுள்ளவன். இவனுக்கு முன், இந்தக் காட்டைக் காவல் செய்தவன், பீரிஸ் என்ற மற்றோர் சிங்களக் கிழவன்; அவன் அறுபது வயதானதும், சர்க்கார் கொடுக்கும் பென்ஷனையும் வாங்கிக் கொண்டு, ஊரில் தன் குடிசையில் வசித்து வருகின்றான்.
II
கார்த்திகை மாதம் பதினைந்தாம் திகதி நடு இரவு பன்னிரண்டு மணிவரையிலிருக்கும்; நல்ல இருட்டு; மெதுவாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. அந்த நேரம், இருளிலேயிருந்து மற்றோரிருள் புறப்பட்டது போல, பொடிசிங்கோ தன் துப்பாக்கியையும் தோளிற் சுமந்து கொண்டு, காட்டைச் சுற்றி, யாரேனும் திருட்டுத்தனமாய் மரம் வெட்டுகிறார்களோவென்று, அங்குமிங்கும் கூர்ந்து பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். ஒரு இடத்துக்கு வந்ததும், 'பட், பட்' என்று யாரோ நடுக் காட்டினுள்ளே மரம் வெட்டும் சத்தம் கேட்டது. பொடிசிங்கோவுக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது; 'என்ன! என் காவலுக்குள்ளேயா இந்த வேலை? இவ்வளவு துணிச்சலுள்ளவனும் இந்தக் கிராமத்திலிருக்கின்றானா?' என்று எண்ணிக்கொண்டு, பூனைபோல் பதுங்கி நாலடி முன்னுக்கு வைத்தான். மரம் வெட்டும் சத்தம் நின்று போய், "ஐயோ! கொலை! கொலை!!" என்று ஒரு அபயக்குரல் அதேயிடத்திலிருந்து புறப்பட்டுக் காடு முழுவதும் பரவிச் சென்றது. அப்பாற் பொடிசிங்கோவிற்கு ஒன்றுமே புரியவில்லை. துப்பாக்கியையும் முன்னுக்கு நீட்டிக் கொண்டு, ஒரே துள்ளில் அந்த இடத்தையடைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது! ஒருவன் தலை வேறு, முண்டம் வேறாக இரத்த வெள்ளத்துள் பிணமாய்க் கிடந்து புரண்டான்; இன்னொருவன், இரத்தம் தோய்ந்தவோர் கூரிய கத்தியுடன், காட்டினுள்ளே ஓடிக்கொண்டிருந்தான். பொடிசிங்கோ, ஓடும் கொலைகாரனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து ஓடிப்போனான். கொலைகாரன் அகப்பட்டாற்தானே! கடைசியாகத் தன் துப்பாக்கியாற் சுட்டும் பார்த்தான். ஆனால் கொலைஞன் அதற்குள் மாயமாய் மறைந்து விட்டான். பொடிசிங்கோவுக்குக் கொலைகாரனைத் தப்பவிட்டது ரொம்ப விசனம். 'சரி; இனிக் கொலையுண்டவனையாவது கவனிப்போம்' என்று எண்ணிக் கொண்டு, அந்த இடத்துக்கு ஓடிவந்தான்; அங்கே இறந்தவனாவது, கொலையின் அடையாளங்களாவது ஒன்றுமே காணப்படவில்லை. ஒருக்கால் இடத்தைத் தவற விட்டுவிட்டேனோ என்று எண்ணிக் கொண்டு, அந்த இருளில், அந்தக் காடு முழுவதும் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தான். ஒரு இடத்திலாவது கொலையுண்டவனையாவது, கொலையின் அடையாளங்களையாவது அவனாற் கண்டுகொள்ள முடியவில்லை. இச்செய்கை அவனுக்கு பெருத்த திகிலையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏககாலத்தில் மூட்டிவிட்டன. 'ஒருவனாக இக் கொலையைச் செய்யவில்லை; பலபேர் இதிற் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்; இதில் ஒரு முடிவு காணாவிட்டால் நான் பொடிசிங்கோவா?' என்று எண்ணிக் கொண்டு எல்லாவற்றிற்கும் கிழவன் பீரிஸையும் கண்டு ஒருமுறை யோசனை கேட்போம்; சிலவேளை அவன் காலத்திலும், இப்படியான செய்கைகள் நடந்திருக்கவும் கூடுந்தானே' என்று சிந்தித்தவனாய் இரவோடிரவாய்ப் பீரிஸ் வீட்டை நோக்கி நடந்தான்.
ΙΙΙ
பொடிசிங்கோ பீரிஸ் வீட்டை அடையும்போது பொழுது புலர்ந்து விட்டது. கிழவன் பீரிஸ் ஒரு கணப்புச் சட்டிக்குப் பக்கத்தில்
குளிர்
காய்ந்து கொண்டிருந்தான். வாயில் ஒரு சுருட்டும் புகைந்து கொண்டிருந்தது. கிழவனுக்குப் பக்கத்திலே ஒரு கோரைப்பாயில், சிறுவனொருவன் இன்னும் குறட்டையடித்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் தூங்கிய மாதிரியில், உலகம் கவிழ்ந்தாலென்ன! நிமிர்ந்தா லென்ன! என்று எண்ணிக்கொண்டு உறங்குபவன் போல இருந்தது. அச் சிறுவன் கிழவனின் பேரன். பொடிசிங்கோ கிழவனின் குடிசையுள் நுழையுஞ் சமயம், பத்து வயதுச் சிறுமியொருத்தி ஒரு பாத்திரத்தில் காப்பி எடுத்துக்கொண்டு வந்து கிழவன் முன் வைத்து விட்டுப் போகும்போது பொடிசிங்கோவையும் ஒருமுறை விறைக்கப் பார்த்துக்கொண்டு சென்றாள். இதனர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. அவள் பார்வையைக் கண்டு அவன் பயந்தே போனான். இவள் கிழவனின் மற்றோர் பேரப்பிள்ளை.
பொடிசிங்கோவைக் கண்டதும் கிழவன் பீரிஸ், கணப்புச் சட்டியை அப்புறம் நகர்த்தி வைத்துவிட்டு, அவனை ஒரு இடத்தில் அமரச்செய்து, அடக்கமான குரலில், "என்ன மகனே இவ்வளவு தூரம்! முகமும் வெளிறினதுபோற் காணப்படுகின்றதே! இரவு நித்திரை இல்லையோ?" (என்றுவிட்டு பொடிசிங்கோ மறுமொழி கூறுமுன்னரே) "ஓகோ! மறந்து விட்டேன்! இரவு நடந்த கொலையைக் கண்டு பயந்து விட்டாயோ?" என்று கேட்டுக்கொண்டு> பொடிசிங்கோவின் முகத்தை உற்றுப் பார்த்தான். எவ்வளவு ஆச்சரியத்தோடும், திகிலோடும் பொடிசிங்கோ கிழவனிடம் வந்தானோ, அதிலும் பன்மடங்கு ஆச்சரியப்பட்டான் பொடிசிங்கோ, கிழவனின் இந்தக் கேள்வியால்.
"என்ன! நீங்களும் இதிற் சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களோ?" என்று ஆத்திரத்துடன் கேட்டான் பொடிசிங்கோ.
கிழவன் கொஞ்சநேரம் மௌனமாய் இருந்துவிட்டு, "இல்லை" என்று அழுத்தமாய்க் கூறினான்.
"பின்னை, கொலை நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியவரும்! இதில் என் சொந்தத் தகப்பனேயானாலும் நான் விடப் போகிறதில்லை"
"மகனே! கொஞ்சம் அவசரப்படாதே. நான் சொல்பவைகளைக் கேட்டபின், நீ செய்ய வேண்டியதை யோசி" என்று கிழவன் சொல்லி விட்டு ஒரு பெரிய பெருமூச்சோடு சொல்லத் தொடங்கினான்.
ஈழத்தின் மூத்த புனைகதையாசிரியர்களில் சோ. சிவபாதசுந்தரம் ஒருவர். ஈழகேசரியின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். வானொலியிலும் பணி புரிந்துள்ளார். ஒலிபரப்புக்கலை' பலராலும் விதந்துரைக்கப்பட்ட நூல். தோட்டத்து மீனாட்சி' என்ற ஆனந்த விகடன் கதை மூலம் சிறுகதைத் துறையில் பிரவேசித்தவர். 'மாணிக்கவாசகரின் அடிச்சுவட்டில்', 'புத்தரின் அடிச்சுவட்டில்' என்ற இவரது யாத்திரையும். ஆய்வும் இணைந்த நூல்கள் இலக்கியத்திற்குக் கிடைத்த அருஞ்செல்வங்கள். சிட்டியுடன் இணைந்து 'தமிழ் நாவல்கள்', 'தமிழ்ச் சிறுகதைகள்' என்ற இரு நூல்களையும் ஆக்கித் தந்துள்ளார். அமரராகிவிட்டார்.