வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தண்ணீர்த் தாகம் I - பண்டிதர் க. சச்சிதானந்தன்


I

பங்குனி மாதம். வெயில் மிகவும் காய்தலாக அடித்துக் கொண்டிருந்தது. றோட்டில் அவ்வளவு நடமாட்டமில்லை. தூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக்கொண்டு வியர்க்க வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்கொண்டிருந்தான். அதற்கப்பால் ஒரு கட்டை வண்டி கடா கடா' என்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டு மணி வெயிலிலே யாரும் தலை காட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலிலே திரியும் நாய்கூட சுவரோரத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில். பலர் பகலுறக்கம் போட்டார்கள். சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள். செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கி வழிந்துகொண்டிருந்தார்.


அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை.நியாஸ்தலத்துக்குப் போகும் கிளை றோட்டும் பெரிய தெருவும் கோணமாய்ச் சந்திக்கும் சந்தி அது. அந்த அரசமரத்தைச் சுற்றி வெயில் கடுமைக்கு உகந்த குளிர் நிழல். தட்டுச் சுளகிலே சின்னச் சின்னக் கூறாகக் கத்தரிக்காய், பிஞ்சு மிளகாய் நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தன. அவளுக்குச் சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லை. அன்றைக்கு வியாபாரம் அவ்வளவு ருசியாகவில்லை. கோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின் ருசி தெரியும். கொண்டுவந்த பெட்டியைக் காலி செய்து விட்டே வீடு திரும்புவாள். அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான்.

 

தலையைக் கோதிக்கொண்டே பள்ளமான அடியிற் சாய்ந்தாள். அரசமிலைகளை இடையிடையே அசைக்கும் காற்று அவள் கூந்தலை யும் ஆட்டிக்கொண்டிருந்தது. ஒரு காகம் மாத்திரம் கொப்பிலே இருந்து பலத்த தொனி வைத்தது.


அவளைப் பார்த்தால் யாருமே இழிகுலத்தவள் என்று சொல்ல மாட்டார்கள். அவளுடைய சிவந்த மேனியும் கருவண்டுக் கண்களும் யாரையும் கொள்ளை கொண்டுவிடும். அவள் ஜாதியைப் பற்றி யாருமே கேட்டதில்லை.


அப்படி அவர்கள் அறிந்திருந்தால் எப்பவோ அவள் வியாபாரத்தில் மண் விழுந்திருக்கும். ஊரார் மாத்திரம் அவளிடம் எதுவும் வாங்குவ தில்லை. அவர்களுக்குத்தான் விசயந் தெரியுமே?


வெயில் எரிய எரிய அவளுக்குத் தாகம் எடுக்கத் தொடங்கியது. பொறுத்துப் பார்த்தாள். நா வறளத் தொடங்கியது. இனி அவளால் சகிக்க முடியாது. மெதுவாக அவற்றைப் பெட்டியிலே போட்டுக்கொண்டு கிளம்பினாள். பக்கத்தில் வீடுகளில்லை. அவையெல்லாம் காய்கறி விளையும் பூமியும் பற்றைக்காடுகளுந்தான்.


செழித்த கமுகுகளும் வாழைகளும் அங்கே கிணறு இருக்க வேண்டுமென்பதை ருசுப்படுத்தின. மெல்ல மெல்ல வீட்டின் அருகே வந்தாள். தெருவழியே ஓடிய சேற்றுத் தண்ணீர் இன்னும் அந்த எண்ணத்தைப் பலப்படுத்தியது. உள்ளே பெட்டியை வைத்துவிட்டு அங்கும் இங்கும் பார்த்தாள். யாரையும் காணவில்லை.


கிணற்றைக் காணக்காண மேலும் தாகம் அவளை வாட்டியது. அடிநாவிலே சொட்டு ஜலமில்லாமல் வறண்டு போயிற்று. அந்த வெயிலின் அகோரத்திற்கு யாருக்குத்தான் தாகமில்லை!


கிணற்றுக் கட்டிலே விளக்கி வைத்த செம்பிலே நிறையக் குளிர்ந்த ஜலத்தைக் காண அவள் உள்ளமும், வாயும் அதிலே ஆழ்ந்துபோயிற்று. பாவம், அந்த விடாயை அடக்க இன்னொரு விடாய் உதவியாய் இருந்தது. தான் அந்த விடாயைத் தீர்க்க அருகதையற்றவள் என்பதை அவள் அறிவாள். இழிகுலத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் தாகசாந்தி செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார் என்பது அவள்' அபிப்பிராயம். அந்தச் செம்பை மாறி மாறிப் பார்த்தாள். யாரையும் காணவில்லை.

 


II

என்னடி செய்தாய் பாதகி" என்று மிரட்டல் கேட்டது அதிகார தோரணையில்

ஏங்கி விலவிலத்துப் போனாள் மீனாட்சி. உடம்பு சொட்ட வியர்த்தது. நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. கண்கள் மிரள மிரள விழித்தன. அவள் தான் செய்த களவு பிடிபட்டதை எண்ணிக் கல்லாய்ச் சமைந்து போனாள்.


"உனக்கு அவ்வளவு மமதையா 'பறைச் சிறுக்கி" என்று ஆத்திரத் தோடு ஓடிவந்தார் நடேசய்யர். விபூதியைப் பொத்திக்கொண்ட கைகள் ஆத்திரத்தால் அங்குமிங்கும் எதையோ தேடின. கோபாக்கினி கண்களி லிருந்து பறந்தது.


"அவ்வளவு நெஞ்சுத் துணிவு. கிணற்றுக்குக் கிட்ட வந்து செம்புச் சலத்திலும் தொட்டுவிட்டாயே? அனுஷ்டான ஜலத்தில் தொட உனக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டது பல்லைக் கடித்துக் கடித்து ஆத்திரத்தோடு அவளை விழுங்கப் போனார். பாவம் (பறைப்) பெண் அல்லவா? கோயிலுக்குப் போனால் எப்படிப் பிராயச்சித்தம் செய்வது என்று விட்டுவிட்டார் போலும்.


"மூதேவி நாயே, இனி என்னுடைய கிணற்றை நான் என்ன செய்வது? அனுஷ்டான பாத்திரத்தை வைத்துவிட்டு விபூதி எடுத்து வருவதற்கிடையில் இப்படிச் செய்துவிட்டாயா? இனி இந்தச் செம்பை....! நீ அந்தக் கதிரன் மகளல்லவா? என்னுடைய அனுஷ்டான ஜலத்தைத் தொட்ட நீ கொள்ளையிலே போகமாட்டாயா? சிவன் உன்னை வதைக்க மாட்டானா?'


ஒரு மின்னல் மின்னியது போல் இருந்தது. உலகமே இருண்டு மடமடத்து அவள் தலையில் கவிழ்ந்தது போல் இருந்தது. பூமியே அவள் கால்களிலிருந்து நழுவிவிட்டது. இரத்தம் நெற்றியிலிருந்து குபீரிட்டது. களங்கமற்ற பார்வைக் கண்ணீரோடு இரத்தம் சேர்ந்து ஓடியது. செம்பு அலங்கோலமாய் உருண்டு போய்விட்டது. அது அவள் கனிவாயைப் பற்றப்போய்த் தோல்வியடைந்ததற்காக அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.


"மூதேவி, இனி இந்தப்பக்கம் தலைகாட்டு, உன் தலையை நுள்ளி எடுத்துவிடுகிறேனோ இல்லையோ பார். உனக்கு இது போதாது போ நாயே வெளியே சனியன்கள் வீட்டில் வந்து கூசாமற் கால் வைக்குதுகள்"


தங்கச்சிலைபோல இவ்வளவும் நின்ற உருவம், இரத்த ஆற்றோடு பெயரத் தொடங்கியது. பெட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு மெதுவாக வெளியே போய்விட்டாள். அவர் எறிந்தபோது வாய்ச்செம்பு அவள் நெற்றியில் நன்றாய்க் கணீரிட்டுவிட்டது. தீண்டாமை அசுரனின் அசுரத்தன்மை அவள் பிறைநுதலில் இரத்தத்தை வாங்கி விட்டது.


பாவம் தாகவிடாய் தீர்ந்தபாடில்லை. களவுக்கேற்ற தண்டனை கிடைத்து விட்டதல்லவா? ஒரு பிராமணனின் அனுஷ்டானப் பாத்திரத்தைத் தொட்டுவிட்டாளல்லவா? எவ்வளவு பொல்லாத கோரக்களவு. இதற்கு இந்தத் தண்டனை போதுமா? சிவனுடைய அனுஷ்டானத்தை முடிக்க விடாமல் தண்ணீரைத் தொட்டு தீட்டாக்கி யவளல்லவா? பெண்ணைத் திட்டிய திட்டுக்களைப் பார்த்துப் பகவான் சிரித்துக்கொண்டிருந்தார். "என் பிள்ளையின் கடூர நா வரட்சியைத் தணிக்காத உனக்கு என்மீது ஒரு அன்பா? உன்னுடைய அனுஷ்டானம் கொடிய நரகிற்கு வாயிலல்லவா" என்று அழுகையோடுதான் அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.


சந்திரனுக்கும் இவள் முகத்திற்கும் நெடுங்காலம் ஓர் வித்தியாசம். அது இன்றோடு பூர்த்தியாகிவிட்டது. அவள் மதிவதனத்திலும் மறு ஏற்பட்டுவிட்டது.


ஏழையின் தண்ணீர் விடாய் என்றுதான் தீருமோ?


நாடறிந்த கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் 'ஆனந்தன்' என்ற புனை பெயரில் 1938-1944 காலகட்டத்தில் நல்ல சில சிறுகதைகளைப் படைத் துள்ளார். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர், 1921இல் பிறந்தார். ஈழத்தின் மூத்த படைப்பாளி. பட்டதாரி, பண்டிதர், முதுகலைமாணி, 'ஆனந்தத் தேன்' இவராக்கிய கவிதைகளின் தொகுதியாகும். 'அன்னபூரணி' 'ஈழகேசரி'யில் இவர் எழுதிய நாவல், 'யாழ்ப்பாணக் காவியம்' இவர் யாத்த காவியம். 'தமிழர் யாழியல்' இவரது சிறப்பான ஆய்வுநூல். ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர். எண்பது வயதுப் பேரறிஞர்.