வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

படுகொலை II - ஈழத்தின் மூத்த புனைகதையாசிரியர் சோ. சிவபாதசுந்தரம்


IV

"எனக்கு உக்குபண்டா என்றோர் மகனிருந்தான்; அவனுக்கு ஐந்து வயது நடந்துகொண்டிருக்கும்போதே அவன் தாய்........என் மனைவி....... எங்களிருவரையும் ஆதரிப்பாரில்லாமல் விட்டுவிட்டு இவ்வுலகை நீத்து விட்டாள்; தாயில்லாப் பிள்ளையென்று நானும் அவனை மிகுந்த அன்போடு வளர்த்து வந்தேன்; பள்ளியில் வைத்துப் படிக்கவுஞ் செய்தேன்; நான் எவ்வளவு அவனிற் பிரியமாய் நடந்து வந்தேனோ அவனும் என்னில் அத்தனை அன்பு காட்டி வந்தான்; என் சொல்லை அவன் ஒருபோதும் தட்டி நடந்ததே கிடையாது; நல்ல புத்திரனைப் பெற்றேனென்று நானும் மகிழ்ந்திருந்தேன்; இருபது வயதானபோது, அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து விவாகமும் செய்து வைத்தேன்; ஏனோ தெரியாது அப்பெண்ணை மணந்துகொள்ள ஆரம்பத்தில் அவன் விரும்பவில்லை; மகனே! தந்தை சொற் தட்டலாமா? என்று நான் பல முறையும் வருத்தத்தோடு கேட்டுவந்தபடியால் என்னைப் பிரியப் படுத்தும் நோக்கமாக அவளை விவாகம் செய்வதாக ஒப்புக்கொண்டான்; மணமும் முடிந்தது; புருஷனும் மனைவியும் ரொம்ப இஷ்டமாகச் சீவித்து வந்தார்கள்; இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்கள்; அவர்கள்தான் (சிறுவர்களைக் காட்டி) இச்சிறுவனும், அந்தப் பெண்ணும்; (இந்நேரத்திற் கிழவனின் கண்களிலிருந்து, கண்ணீர் வடிந்தது.) நானும் அவர்களின் குடும்ப சீவியத்தைக் கண்டு மகிழ்ந்திருந்தேன்; குழந்தைகள் பிறந்த பின்பு, இடையிடையே புருஷன் மனைவிக்கிடையில் சச்சரவு நடப்பதாகப் பிறர் கூறுவதுண்டு; இதை நான் ஆரம்பத்தில் நம்பவில்லை; ஒருநாள் என் மகனை அழைத்து, நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா என்று விசாரித்தேன். பீதிரிஸ் என்ற ஓர் வாலிபன் அடிக்கடி தங்கள் குடிசைக்கு வருவதாகவும், அவனைப் பற்றித் தன் மனைவியைக் கேட்டபோது, அவன் தன் அண்ணன் முறையானென்று அவள் கூறுவதாகவும், ஆனால், அவர்கள் சம்பாஷணைகளைப் பார்க்கும்போது, தனக்கு அவர்களிற் சந்தேகம் உண்டாகிறதென்றும், அவனின் உறவை விட்டுப்போடென்று தன் மனைவியிடம் கூறினால் அவள் அதைக் கேட்பதாயில்லையென்றும் என் மகன் என்னிடம் கூறினான். நானும் ஒருமுறை என் மருமகளை அந்தக் கொடியவளை..... கண்டு வேண்டிய புத்திமதிகளை எல்லாம் சொல்லி வைத்தேன்; சில நாட்களின் பின் என் மகன் மறுமுறையும் என்னிடம் வந்து, அவன் தன் வீட்டுக்கு அடிக்கடி வருவதாகவும், அதுவும் தான் இல்லாத சமயங்களிலேதான் அவன் அதிகமாக வந்து போவதாகவும், ஒருமுறை தானே தன் கண்களால் அவர்களின் கூடா ஒழுக்கத்தைக் கண்டுவிட்டதாகவும் எனக்குச் சொல்லி அழுதான்; இதைக் கேட்டதும் எனக்கு இடிவிழுந்த மாதிரியாய் விட்டது; என் அருமைக் குழந்தைக்கு மீளாத் துயரத்தைத் தேடி வைத்து விட்டேனே என்று வருந்தினேன்; கோட்டு மூலம் விவாக பந்தன நிவிர்த்தி செய்து கொள்வோம் என்று ஆறுதல் கூறி அவனை அனுப்பி விட்டு அதற்கான ஆயத்தங்களையுஞ் செய்து வந்தேன்;

"ஒருநாள் கார்த்திகை மாதம் பதினைந்தாம் திகதி பகல் பன்னிரண்டு மணிவரையிலிருக்கும். என் மகன் மறுபடியும் என்னைத் தேடி வந்தான். அன்று அவன் சந்தோஷத்தோடிருப்பவன் போலக் காணப்பட்டான். 'அப்பா, நான் பீதிரிசோடு ரொம்பச் சினேகிதனாய் விட்டேன்' என்றுங் கூறினான். ஆனால் அவன் முகம் மாத்திரம் ஏதோ செய்யச் சங்கற்பம் செய்து கொண்டிருக்கிறானென்பதைத் தெளிவாய்க் காட்டிற்று. 'மகனே!! புத்தியாய் நட' என்று மாத்திரம் நான் அன்று அவனுக்குச் சொன்னேன். அன்று என்னுடன் கூடவே மத்தியானப் போசனமும் உண்டான். போகும் போது என்றுமில்லாத மாதிரியாய், என்னைத் தாவிப் பிடித்து என் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். (இதைச் சொல்லும் போது, கிழவனின் குரல் கம்மிற்று. விம்மி விம்மி அழுதான். பின் திடப்படுத்திக்கொண்டு) 'ஏனப்பா இதெல்லாம்' என்று கேட்டேன். யாதும் பேசாமல் என்னையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போய் விட்டான். அன்றிரவு எனக்கு நித்திரையே கிடையாது. பொல்லாத கனவுகளெல்லாம்

கண்டேன். மூளை குழம்பிக்கொண்டு கிடந்தது.

 

V

மற்றநாள், அதாவது பதினாறாந் திகதி அதிகாலையில், ஒரு பொலீஸ் இன்ஸ்பெக்டரும், ஐந்து ஜவான்களுமாக என் குடிசையை நோக்கிச் சந்தனக்காட்டுள் வந்தார்கள். நான் நடுங்கிப்போய், 'என்னையா சமாச்சாரம்?' என்று இன்ஸ்பெக்டரை நோக்கிக் கேட்டேன். 'உன் மகன் உக்குபண்டா> பீதிரிஸ் என்பவனை இக்காட்டினுள்ளே வெட்டிக் கொலை செய்து விட்டானாம்.' என்று என்னைப் பார்த்து இரக்கத்தோடு கூறினார் இன்ஸ்பெக்டர். 'யாரையா சொன்னார்கள்?' என்று படபடப்புடன் கேட்டேன் நான். அப்போது என் இருதயம் பிளந்துவிடும் போலிருந்தது. தலை 'கிருகிரு வெனச் சுழன்றது. 'ஏன்! உன் மகனே தான் கொலை செய்த கத்தியோடு பொலீஸ் ஸ்டேசனில் வந்து தன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறான்' என்று கூறிவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு, கொலை நடந்த இடத்துக்குப் போனார்கள். ஐயோ! அங்கே நான் கண்ட காட்சி, என்னைப் பயித்தியக்காரனாக அடித்துவிடும் போலிருந்தது. பீதிரிஸ் தலை வேறு> முண்டம் வேறாக இரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தான்."

"எதிர்வழக்காடலாம் என்று பிரயாசப்பட்டேன். ஆனால், என் மகனின் வாக்குமூலத்தைக் கேட்டபின், பிரயோசனமில்லை என்று விட்டு விட்டேன். 'பீதிரிஸைச் சிநேகம்பண்ணி, களவாய்ச் சந்தனக்கட்டைகள் வெட்டலாம் வாவென்று அழைத்துக்கொண்டு போய், அவன் கட்டைகள் வெட்டும் போது, என் கத்தியால் ஒரே வெட்டில் தலை வேறு, முண்டம் வேறாக வெட்டினேன்' என்று வாக்குமூலங் கொடுத்திருந்தான். அவன் தூக்கு மேடைக்குப் போகும்போது> 'அப்பா என் பிள்ளைகள் உன் பொறுப்பு' என்று கண்ணீரோடு என்னைப் பார்த்துக் கூறினான். இது நடந்து எட்டு வருஷங்களாகின்றன" என்று கிழவன் கதையை முடித்து விட்டு, "மகனே! பொடிசிங்கோ! அந்த இருவரும் அகாலத்தில் மடிந்த படியால் அவர்களின் ஆவிகள்தான் ஒவ்வொரு வருஷமும் கொலை நடந்த அதே நாளில் தோன்றி மறைகின்றன. அவைகளையிட்டு நீ பயப்படாதே! அவை ஒன்றுஞ் செய்யா. நான் காட்டிலிருந்த காலத்தில் ஒவ்வொரு வருஷமும் அதேநாளில் மறைந்திருந்து, என் மகனின் ஆவிரூபத்தைக் காண்பதில் என் மனத்துயரை அடக்கி வந்தேன்" என்றான் கிழவன் பீரிஸ்.

நான் இதை நம்பேன்! ஒருபோதும் நம்பேன்" என்றான் பொடிசிங்கோ.

"நீ நம்பமாட்டாய்தான்; ஆனால், என் மகனின் பெண்ணாகிய அக்கொடியவள், தன் சுற்றத்தாரோடு போய் வசிக்கின்றாள். அவளிடம் போய்க் கேள். சந்தனக் காட்டைப் பற்றிய சர்க்கார் தஸ்தாவேஜுகளையும் போய்ப் பார். அல்லது பொறுமையோடு அடுத்த வருஷமும் இந்த நாளிற் போய்ப் பார் என்று சொல்லிவிட்டுக் கிழவன் தன் அலுவலாக எழுந்து போய்விட்டான்.


ஈழத்தின் மூத்த புனைகதையாசிரியர்களில் சோசிவபாதசுந்தரம் ஒருவர்ஈழகேசரியின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்வானொலியிலும் பணி புரிந்துள்ளார்ஒலிபரப்புக்கலைபலராலும் விதந்துரைக்கப்பட்ட நூல்தோட்டத்து மீனாட்சிஎன்ற ஆனந்த விகடன் கதை மூலம் சிறுகதைத் துறையில் பிரவேசித்தவர். 'மாணிக்கவாசகரின் அடிச்சுவட்டில்', 'புத்தரின் அடிச்சுவட்டில்என்ற இவரது யாத்திரையும்ஆய்வும் இணைந்த நூல்கள் இலக்கியத்திற்குக் கிடைத்த அருஞ்செல்வங்கள்சிட்டியுடன் இணைந்து 'தமிழ் நாவல்கள்', 'தமிழ்ச் சிறுகதைகள்என்ற இரு நூல்களையும் ஆக்கித் தந்துள்ளார்அமரராகிவிட்டார்.