வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தண்ணீர்த் தாகம் II - பண்டிதர் க. சச்சிதானந்தன்


III

நடுநிசி. எங்கும் ஒரே நிசப்தம். ஆனால் அறைகளில் இருமும் சப்தமும் குழந்தைகளின் கீச்சுக்குரலும் இன்னும் ஒழிந்தபாடில்லை. 'ஐயோ அம்மா என்று அடுத்த அறைகளில் வியாதிக்காரர் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தைகளைத் தாலாட்டும் தாய்மாரின் பல தினுசான குரல். அங்கங்கே மின்சார விளக்குகள் தூக்கிக்கொண்டிருந்தன.


ஒரு கிழவன் பூநூலை இழுத்துவிட்டுக் கொண்டு மூலையிலே செருமிக் கொண்டு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு முக்கி முனகிக் கொண்டிருந்தான். அவனை யாரும் கவனிப்பார் இல்லை. அவன் சுற்றமெல்லாம் இன்று அவனைக் கைவிட்டுவிட்டன. அவன் அவர்கட்கெல்லாம் என்ன செய்தான்? ஒரே ஒரு பிழை. வாலிபமாய் இருந்த காலத்திலே தெரியாமல் தூரத்திலே உள்ள வெள்ளாளப் பெண்ணைப் பார்ப்பனத்தி என்று கல்யாணம் செய்தான். சிலநாட்கள் சென்றதன் பின் சுற்றம் எல்லாம் அவனை இகழ்ந்துதள்ளிவிட்டது. அதன் பின்புதான் அவனுக்கு விஷயம் புரிந்தது. தான் வெள்ளாளப் பெண்ணைக் கட்டிவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்ல அவளைக் கைவிட்டான். பெண்வழியால் லாபமும் இல்லை. இனசனமும் இல்லை. இன்றுவரையும் தனியேதான் காலந் தள்ளினான். இன்றைக்கு வியாதியாய்ப் போனான். கவனிப்பார் இல்லை. தர்ம ஆசுப்பத்திரியிலே கிடக்கிறான்.


அவனுக்கு மேலும் மேலும் மூச்சுவாங்கத் தொடங்கியது. தண்ணீர் விடாயெடுத்தது. அடிநாவிலே ஈரலிப்பில்லை. இருமி இருமி வரண்டு போயிற்று. தாகவிடாய் வரவர அதிகரித்தது. பேச்சுக் கொடுத்தாலோ இருமல் வாட்டுகிறது.


"அம்மா, தண்ணீர்! நாவை வறட்டுகிறது" என்று சொன்னான் அந்தக் கிழவன் கெஞ்சும் குரலில். பதிலே இல்லை. அடுத்த அறையில் இருந்து ஒரு இருமல்தான் அதற்குப் பதில். கொஞ்சநேரம் நிசப்தம்.


"அம்மா, என்னால் சகிக்க முடியவில்லை. தண்ணீர் விடாயால் செத்துப் போய்விடுவேன். தண்ணீர் கொடுங்களம்மா.''


யாருமே மூச்சு விடவில்லை. தாதிகள் எல்லாம் ஒரே உறக்கம் போலும்.


ஒரு பெண்ணுருவம் அந்த மூலையருகே வந்தது. ஆமாம் அவளும் ஒரு தாதிப் பெண்தான். அந்த ஆஸ்பத்திரியில், காலதேவன் கீறிய கோடுகள் பதிந்த அவன் முகத்தை உற்றுப் பார்த்தது. ஆனாலும் அந்த முகம் அவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. கிழவன் தண்ணீருக் காக வாயைத் திறந்தான்.


"ஐயா, (பறைச்சி) தொட்டுத் தண்ணீர் தந்தால் குடிப்பீர்களா? தாங்கள் பிராமணரல்லவா?” என்றாள் அவள்.


"அம்மா, அம்மா, குழந்தாய், பிராமணனானாலென்ன? பறையனா னாலென்ன? என் தாகத்திற்கு நீர் கொடம்மா! கொடிய மரணதாகம் நெஞ்சை அடைக்கிறது."


அவள் ஒரு சின்னப் பாத்திரத்தில் இளஞ்சூடான நீரைக் கொண்டு வந்தாள். கிழவன் விடாய் அலாதியால் வாயைத் திறந்தான். ஆகா! உள்ளம் பூரிக்க -ஆத்மா சாந்தியடைய - மெல்ல மெல்ல நீரை வார்த் தாள் பெண்மணி.


"அம்மா, இந்த மரணவிடாயில் என்னைக் காப்பாற்றினாய். உன் குலம் நன்றாக வாழட்டும். நீ யாரம்மா?"


"ஐயா, என்னைத் தெரியாதா? நன்றாக உற்றுப் பாருங்கள்" என்று குனிந்தாள் அந்தத் தாதி.


"ஞாபகம் இல்லையே?"


தன் நெற்றியை அவன் முகத்திற்கு நேரே பிடித்தாள். "இதோ பாருங்கள் இந்த மறுவை. தண்ணீர் விடாய்த்து அன்றொருநாள் உங்கள் வீட்டில் வந்தேனல்லவா? தாகவிடாய் தாங்காமல் சிறுபிள்ளைத் தனத்தால் ஏதோ அனுஷ்டானச் செம்பைத் தொட்டுவிட்டேனென்று நீங்கள் செம்பால் எறிந்த காயம் இதுதான்" அவள் நெற்றியைக் காட்டினாள் கிழவனுக்கு.


கிழவன் முகம் காட்டிய குறியின் உணர்ச்சி, ஏதோ புதிதாய் இருந்தது. "ஆமாம், கதிரன் மகளல்லவா? எப்படியம்மா இங்கே வந்தாய்? தாதியாகவும் வேலை பார்க்கிறாயே?"


"ஆம் ஐயா, எல்லாம் அந்தக் கிறிஸ்தவப் பெரியாரின் கிருபைதான். அன்றைக்கு நீங்கள் தீர்க்காத தாகத்தை அந்தப் பெரியார்கள் தீர்த்தார்கள். கல்வியுமளித்து இந்த நிலைமையில் வைத்தார்கள்


கிழவன் உள்ளம் வெடித்துவிட்டது. 'என் மரண தாகத்தை நீக்கிய கரங்களுக்கா அன்று இரத்தக்கறை ஏற்படவேண்டும்! இந்த விடாய் தானே அந்தப் பசலைக்கும் அன்று!"


"அம்மா என்னை மன்னி. ஜாதிக் கர்வத்தால் அன்று உன்னை எறிந்த என்னை மனப்பூர்வமாய் மன்னி!'


கிழவன் அவள் காலடியில் விழ எழுந்தான். பாவம்! அப்படியே தொப்பென்று விழுந்தான். விடாய் அடங்கியதோடு, அவன் கண் திறக்கவேயில்லை.


நாடறிந்த கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் 'ஆனந்தன்' என்ற புனை பெயரில் 1938-1944 காலகட்டத்தில் நல்ல சில சிறுகதைகளைப் படைத் துள்ளார். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர், 1921இல் பிறந்தார். ஈழத்தின் மூத்த படைப்பாளி. பட்டதாரி, பண்டிதர், முதுகலைமாணி, 'ஆனந்தத் தேன்' இவராக்கிய கவிதைகளின் தொகுதியாகும். 'அன்னபூரணி' 'ஈழகேசரி'யில் இவர் எழுதிய நாவல், 'யாழ்ப்பாணக் காவியம்' இவர் யாத்த காவியம். 'தமிழர் யாழியல்' இவரது சிறப்பான ஆய்வுநூல். ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர். எண்பது வயதுப் பேரறிஞர்.