ஈழத்தமிழரின் 60 வருட போராட்டத்தின் சாட்சி! யார் இந்த சம்பந்தன்?
ஈழத்தின் மூத்த தமிழ் அரசியல்வாதி இராசவரோதயம் சம்பந்தன் இந்த வார தொடக்கத்திலிருந்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(01.07.2024) தனது 91வது வயதில் காலமானார்.
யார் இந்த சம்பந்தன்?
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவரென்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
அதன்பின் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார்.
இந்த தம்பதிக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தமிழ்த்தேசிய அரசியலுக்கு தத்து கொடுக்கப்படல்.
சம்பந்தன் தன்னுடைய 44வது வயதில், 1977ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு 15,144 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
தொடர்ந்து 1983ம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும்,
1983 கறுப்பு யூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான(பதிவுகளில் மாத்திரம் உள்ளபடி) தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும்,
அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
இவ்வாறாக 3 மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து 1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப், ஈபிஆர்எல்எஃப், டெலோ, தவிகூ கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும் 6,048 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார்.
அந்தமுறை கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து 2001ம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்த நிலையில்,
கூட்டமைப்புக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பினை ஏற்றார்.
ஆனால் அந்தநேரத்தில் கூட்டமைப்புக்கு தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாமையால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது.
சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 40,110 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று, 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது.
ஆனால் இந்நிலைப்பாட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பிலிருந்து விலகினார்.
அதனால், 2004ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர்.
சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறாக முறையே
2004இல் 47,735 வாக்குகளையும்,
2010இல் 24,488 வாக்குகளையும்,
2015இல் 33,834 வாக்குகளையும்,
2020இல் 21,422 வாக்குகளையும்
பெற்று நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழன்?
2015 தேர்தலில் சிங்களப்பெரும்பான்மை கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி(ஐதேக), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றின.
ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், 2 முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன.
இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் தமிழ்த்தேசியம், தமிழ் மக்களின் விடுதலை சார்ந்து செயற்படாததால் தமிழ் மக்கள் தூக்கிகொண்டாடிய நிலையில் இருந்து தூக்கியெறியப்பட்டு விமர்சிக்கப்பட்டவர் என்னும் ஒரு கறுப்பு பக்கமும் இவருக்கு உண்டு.
ஒரு மூத்த அரசியல் தலைவராக இரா. சம்பந்தன் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய நரன் மீடியா குழுமம் இறைவனை வேண்டுகின்றது.