பட்டதாரியான இளம் தாய் அதிக குருதிப்பெருக்கினால் பரிதாபமாக உயிரிழப்பு!
tamil news: நேற்றையதினம்(28.07.2024) மன்னார் தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிக குருதிப்பெருக்கினால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மன்னார் தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த மரியராஜ் சிந்துஜா(வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணிற்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்துள்ளது.
இதனையடுத்து 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாயும் சேயும் நலமாக வெளியேறியுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து 7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.
அவரே தனது மகளை மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை(27.07.2024) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து அன்றிரவு நோயாளர்காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குருதியோட்டம் கட்டுப்படாமல் தொர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததால் காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் சுயநினைவை இழந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அவசரச்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட நிலையில் நண்பகல் 11 மணிக்கு பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற அன்றிரவே வைத்தியர்கள் பார்வையிட்டிருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என அந்தப் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
இறந்த இளம் தாயான சிந்துஜா, சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவை வினவிய போது,
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்டவைத்திய அதிகாரியின் பரேதப் பரிசோதனை இன்று(29.07.2024) முன்னெடுக்கப்பட்டதாகவும்,
அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும்.
எப்படியிருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.