வாழ்வு I - சிறுகதை மூலவர் சி.வைத்தியலிங்கம்
எதிர் எதிராக அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களது உள்ளங்கள் வேறுவேறு பாதையில் சென்று கொண்டிருந்தன. அவர் களைச் சூழ்ந்து ஒருவித
அமைதி நிலவியது.
அவள் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை
என்றுஞ் சொல்ல முடியாது. அவன் சம்பந்தமான நினைவுகளில் தானும் சம்பந்தப்பட்டுக் கொண்டேயிருப்பதை
அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை உண்டாகும்படி அவள் ஒருநாளும்
நடந்ததே இல்லை. ஆனாலும் அவன் நம்பியிருந்தான். அந்த நம்பிக்கை எந்த ஆதாரத்தைக் கொண்டெழுந்ததோ
அதைப்பற்றி அவள் கவலைப் படவே இல்லை.
முதலில் நல்லவன், பரிசுத்தமானவன்
என்று மட்டும் எண்ணினவள் பிறகு?... தானும் அந்த நினைவுகளுக்கு அடிமையாகியிருக்கிறாள்.
அப்பொழுது அதில் ஒரு அபாயமும் தெரியவில்லை. இன்றோ? மேலே அவள் சிந்திப்பதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தாள். அவளை அறியாமலே ஒரு மெல்லிய நீண்ட மூச்சு வந்தது.
அதேசமயம் அவனும் பெருமூச்சுவிட்டான்.
உடனே அவள் கேட்டாள், "என்ன
யோசிக்கிறீர்கள்?" அவனும் திருப்பிக் கேட்டான்.
"முதலில் நீ சொல்லு. எதைப்
பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாய்?"
அவள் ஒருமாதிரிச் சிரித்தாளே தவிரப் பதில் ஒன்றுஞ் சொல்லவில்லை. மறுபடியும் இருவரும் மௌனமாக இருந்தார்கள். இப்பொழுது அவள் சிந்தனைகள் நிதானமாக எந்தப் பாதையிலும் செல்லவில்லை. சுழன்று சுழன்று தடுமாறி அலைந்தது. அவன் மட்டும் நினைவற்று அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஒருவித வேதனை கலந்த உணர்ச்சியோடு இதைச் சொன்னான்.
"சாவித்திரி! மனிதனாகப் பிறப்பது மிகவும் மேலானதுதான். ஆனால் அதிலும் சில கஷ்டங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியான கஷ்ட நிலைகள் வரும்போதுதான் 'எதற்காக மனிதனாகப் பிறந்தோம்' என்ற வேதனை உண்டாகிறது. இதை நீயும் ஒப்புக் கொள்வாய் என்றே எண்ணுகிறேன்."
உடனே அவள் சொன்னாள்: அவளுடைய பதில் நிதானமாக இருந்தது.
"மனிதனாகப் பிறப்பது மேலானதோ தாழ்ந்ததோ என்று ஆராய நான் விரும்பவில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையைத் தானா கவே தேடிக்கொள்கிறான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதைக் காலம் கடந்த உண்மை என்றுகூடச் சொல்லலாம்"
"எல்லாவற்றையும் அவனவனே தேடிக் கொள்கிறான் என்று சொல்வதற்கில்லை. சாவை ஒருவன் தானாகவே தேடிக் கொள்கிறான் என்று சொல்லிவிடலாம். பசியை அப்படிச் சொல்லிவிட முடிகிறதா? சிலவற்றை நாமே வரவழைத்துக் கொள்ளுகிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் அப்படிச் சொல்லுவது தப்பு"
அவள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை. அவன் பிறகும் தொடர்ந்து சொன்னான்.
"உண்மையிற் சிலர் பாக்கியசாலிகள்தான்
பெரும்பாலானவர்களுக்கு பாக்கியம், அதிஷ்டம் என்பவற்றின் அர்த்தமே தெரிவதில்லை. இந்தப் பாக்கியங்களையோ அதிஷ்டங்களையோ பற்றி அவர்கள் நினைக்கிறதுமில்லை. இவர்களுக்கு இடையிற் சிலர் இருக்கிறார்கள். இந்தச் சிலருக்கு அதிஷ்டமும் கிட்டுவதில்லை. அது கிடைக்கவில்லையே என்ற துக்கமும் விட்டு நீங்குவதில்லை. மனிதனைப் படைத்த தெய்வம் அவனுக்கு மூளை\, புத்தி, மனம் என்ற இவைகளை ஏன் வைத்தது என்றுதான் நான் அடிக்கடி எண்ணுகிறேன்"
கடைசியில் அவன் பேச்சில் துயரத்தின் பிரதிபிம்பம் மெல்ல முகங் காட்டியது. அவளுடைய உள்ளத்திலும் அதன் சாயை படிந்துவிட்டது. ஆனால், அதை வெளிக்குக் காட்டாமலே அவள் பதில் சொன்னாள்:
"நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் ஒருவித மயக்கமே ஆகும். முடிவில்லாமல் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருப்பதில் ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை"
இந்த வேதாந்தம் அவனுக்குச் சிரிப்பையே உண்டாக்கியது. பிறகு சொன்னான்: "நீ என்னை ஜனக மகாராஜா என்று எண்ணுகிறாயா? எல்லாம் வெறும் மயக்கம், வாழ்வு அநித்தியம் என்ற இவையெல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள். அதற்காக என் கண்முன்னே உட்கார்ந்திருக்கும் உன்னைப் பார்த்து, 'இவளும் அநித்தியமான ஒன்று தான்' என என்னால் எண்ண முடியவில்லை."
பேச்சை அவ்வளவில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனுடைய பார்வையிலே சொல்ல வேண்டியதை எப்படியோ சொல்லி விட்டேன் என்ற மனத்திருப்தி காணப்பட்டது.
அவளோ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். தடைகள், ஆசைகள், நியாயங்கள் என்று எத்தனையோ விஷயங்களை அவளுடைய மனம் தொட்டுக்கொண்டு ஓடியது. கடைசியில் குறுக்கே இறங்கி “என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
எதிர்பாராத இந்தக் கேள்வி அவனைத் திடுக்கிடச் செய்துவிட்டது. ஆனாலும் கொஞ்சம் பொறுத்துப் பதில் சொன்னான்:
"இதில் நீயோ நானோ தனித்து ஒன்றும் செய்யமுடியாது. நானும் தெண்டிக்கிறேன். நீயும் கொஞ்சம் பிரயத்தனப்படு. எப்படியும் இந்த நினைப்புக்களை அழித்து விடலாம். நீ சுகமாக வாழுகிறாய் என்று தெரிந்தாலே எனக்குப் போதும். இப்பொழுது நீ என்னை மன்னிக்க வேண்டும். இவ்வளவையுமே நீ செய்ய வேண்டுமென விரும்புகிறேன்''
பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. அவளும் பதில் சொல்லாமலே நின்றாள். அவன் பலமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வெளியே சென்றான்.
நீண்ட நாட்களாக வளர்த்த அந்த ஆசைத் தீயின் ஒரு பகுதி அந்தச் சமயம் பலவந்தமாக அவிக்கப்பட்டதேயன்றி, முற்றாக அணையவில்லை. அது மூலைக்குமூலை பதுங்கியிருந்து பற்றி எரிந்தது. ஆயினும் அவன் தடுமாறவில்லை.
'அவளுடைய நன்மையை உத்தேசித்தாவது நான் மறக்கவேண்டும். அல்லது அவளையும் படுகுழியில் விழுத்துகிற பாவம் என்னையே சாரும்.'
"உண்மையில் அவள் தந்தை எண்ணுவதில் நியாயமிருக்கிறது. அவளுக்காக இருக்கிற கணவன், என்னைவிட ஆயிரம் பங்கு உயர்ந்தவன். குணம், பதவி, பணம் எல்லாவற்றிலும் அவனுக்கு நானா இணையாவது? அவள் நன்றாக வாழவேண்டும். உயர்ந்த அன்புக்கு இப்படி நினைப்பதுதான் சாக்ஷி"
அவன் தன்னை ஒருவாறு சமாதானஞ் செய்து அமைதியடைய விரும்பினான். கழிந்த வாழ்வை ஒரு கனவுபோல மங்க வைத்துக் கொண்டே காலமும் ஓடிச் சென்றது.
ஈழத்தின் சிறுகதை மூலவர்களில் ஒருவர் சி.வைத்தியலிங்கம் ஆவார். `கலைமகள், ‘கிராம ஊழியன்', 'ஆனந்த விகடன்', 'ஈழகேசரி' முதலான பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மூன்றாம் பிறை’ அல்லயன்ஸ் கம்பனியின் 'கதைக்கோவையிலும், 'பாற்கஞ்சி' 'ஈழத்துச் சிறுகதைகள்' தொகுதியிலும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளைக் கொண்ட தொகுதி 'கங்கா கீதம்' என வெளிவந்துள்ளது. ரவீந்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். அமரராகிவிட்டார்.