வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஆறிய மனம் I - புனை கதையாசிரியர் சம்பந்தன்


எப்படி மிஸ்ரர் தாமோதரம்; என்ன சாக்கு வைத்துக்கொண்டு பென்ஷன் வாங்கிக்கொண்டு வந்தீர்? டக்ரர் சபேதார் இடந்தானே மெடிக்கல் சேர்டிவிக்கேற் வாங்கினீர்? மூத்த பையன் படித்தானே கிங் கொலீஜில்; அவனையும் கொண்டுவந்து விட்டீர்களோ? அவ்விடத்துப் புதினங்கள் என்ன?” - என்றிவ்வாறு அடுக்கிக்கொண்டே வந்து உட்கார்ந் தார் சுப்பிரமணியம். "நீங்கள்தானே பழைய பூடுகள்; நீங்கள் காட்டிய வழிகள் எங்களிடம் எப்படித் தப்பமுடியும்; ஒருமாதிரி பென்ஷனும் வாங்கிக்கொண்டு வந்துதான் விட்டோம். எப்படி, உங்களுக்கு இந்த யாழ்ப்பாணம் பிடித்துக்கொண்டதா, என்ன?” என்று தம் உள்ளே அவாவிய எண்ணத்திற்கு ஒரு அத்திபாரம் போட்டார் தாமோதரம்.

 

தாமோதரம் நாளது 1937-ம் வருஷம் டிஸம்பர் மாசத்தோடு எவ். எம். எஸ். இல் தம்மைப் பிடித்து வைத்திருந்த வேலையையும் உதறித் தள்ளிவிட்டு தம் இரண்டு புத்திரர் - மனைவியோடும் ஜன்ம தேசத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடைய மூத்த பையன் கோலாலம்பூரிலே கிங் கொலீஜில் மூன்றாம் போமில் படித்தவன். அவனைக் கொழும்பில் றோயல் கொலீஜில் படிக்க வைக்கலாம் என்னும் எண்ணத்தோடுதான் அழைத்து வந்தார். ஆனால் ஜன்ம தேசத்தில் அவருடைய எண்ணம், தம்மைப்போன்ற இரண்டொரு பென்ஷனர்களுடைய தரிசனத்தால் மாறிவிட்டது. அதனாலேதான் மணியம் தம்மிடம் வந்தபோது, 'யாழ்ப் பாணம் எப்படி?' என்னும் கேள்வியைப்போட்டு அவரை ஒருமுறை விழிக்கச் செய்தார். பாவம், மணியம் எப்படி யாழ்ப்பாணத்தைப் பற்றி அறிவார். அவருக்கு வெளுத்ததெல்லாம் பால். மனதில் அப்பழுக்கில் லாத மனுஷன். மதுரநாயகனின் ஏதோ ஒரு நல்ல வினையாற் போலும், கந்தையா உபாத்தியாயர் சிபார்சு செய்தபடி - நம்பி - அவர் தமது மகன் மதுரத்தை இந்துக் கொலீஜுக்கே படிக்க அனுப்பி வைத்தார். அவன் அங்கே ஜூனியர் வகுப்பில் வாசித்துக் கொண்டு வருகிறான்.

 

என்ன பேசாமல் இருக்கிறீர்கள்; மணி, மாமாவுக்கு ரீ கொண்டு வா; சீக்கிரம்" என்று தம் இளைய மகனிடம் தூண்டினார். மணியம் தலை தூக்கி உட்கார்ந்தார். “யாழ்ப்பாணம் என்ன அப்படி இப்படி ஒரு சிறிசு பட்ட ஊரா? வந்து இரண்டு மாசங்கூட ஆகவில்லை. இதற்கிடையில் நான் எதை என்ன அறிந்து உங்களுக்குச் சொல்லுவது? இங்கே மனிதர்கள் எல்லாம் ஒரு மாதிரியாய்த்தான் இருக்கிறார்கள் எனக்கு. ஒருவர் இன்றைக்கு ஒன்று சொல்லுவர்; நாளைக்கு உடனே அதை மாற்றிப் பேசுவர். ஒரு நாளைக்குக் கடவுள் இல்லை என்கிறார். மற்ற நாளைக்கு 'ஆ! கடவுளே இப்படியும் வரலாமோ' என்கிறார். நேற்றுச் சொன்னார்: 'சிங்களவர் எங்கள் சோதரர்தான்; அவர்களோடு ஒத்து ழைத்து வாழ வேண்டும்' என்று. இன்று சொல்கிறார்: 'சிங்களவர் நமது. விரோதிகள்; உத்தியோக வேட்டைக்குப் பாடுபடுகிறார்கள்; உத்தியோ கத்தை மடக்கிக்கொண்டு தமிழனைத் திண்டாட வைக்கிறான்' என்று. ஒரு பத்திரிகையில் ஒருநாள் ஒருவர் எழுதுகிறார்: 'எங்கள் சமயத்துப் பிள்ளை எங்கள் சமயப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும். பிற சமயத்துப் பிற பள்ளியிலே படிக்கவைத்தால் பிள்ளைகளும் பரமோக மாகி ஒன்றுக்கும் உதவாக்கரையாகிறார்கள்"

 

"சைவர்கள் சைவப்பள்ளியிற் படிக்கட்டும்! அப்படியே மற்றவர் களும்; அந்த நாளில் நாவலர் ஒருவர் இருந்தார்; அவர்தான் யாழ்ப்பா ணத்தை யாழ்ப்பாணம் என்று சொல்ல வைத்தவர்; எத்தனை குறைத் தமிழ் பேசும் மனிதர் யாழ்ப்பாணத் தமிழைக் கண்டு மயங்குகின்றார்கள்; சைவம் - தமிழ் இரண்டுக்குமாகப் பிறந்தவர்தான் நாவலர்.....' என்று, மற்றொரு நாள் மற்றொரு பத்திரிகையிலே ஒருவர் எழுதுகிறார்: 'அப்பா, எங்கள் பிள்ளை உத்தியோகம் பார்க்கவேண்டும். வைத்தியராவதற்கு நல்ல படிப்பு வேண்டும். நல்ல படிப்புள்ள பள்ளிக்குத்தான் நமது பிள்ளைகளையும் அனுப்ப வேண்டும். நல்ல உபாத்திமாரில்லாமல் சம்பளத்தைக் கருதிப் படிப்பிக்கிற உபாத்திமாரிடம் எங்கள் பிள்ளைகளை அனுப்பி, அவர்கள் மூளையைக் குழப்புதல் கூடாது. பிள்ளை உத்தியோகமான பிறகு சமயத்தையோ தமிழையோ கட்டியழட்டும்! எல்லாம் வயிறு குளிர்ச்சியாக இருந்தால்தானே வரும்.....' என்று. பாரும் இன்னும் எத்தனை? ஒருநாளைக்கொருவிதம்! பனையடி போகமுன் ஒருவிதம் பின் வேறு ஒருவிதம். அப்பப்பா! எனக்கு ஒன்றுமாய்ப் புரியவில்லையே!" என்று இவ்வாறு தம் மனசில் இரண்டு மாசமாகக் குமுறிக்கொண்டிருந்த எண்ணங்களை எல்லாம் கொட்டி அளந்தார்.

 

தாமோதரம் திறந்த வாய் மூட மறந்தே கேட்டுக்கொண்டிருந்தார். மணி கொண்டு வந்த 'ரீ அப்படியே கிடந்து ஆறியது! தாமோதரத்தின் சம்சாரம் கதவோரத்தில் நின்று இப்பிரசங்கமெல்லாம் கேட்டவள்> ஒரு பெருமூச்சுடன் சமையலுட் போனாள். தாமோதரம் மணியத்தின் வரவையே எதிர்பார்த்திருந்தவர் மற்றொன்றையும் கவனித்தாரில்லை. தாயின் சமிக்ஞைப்படி போன மணி சுடச் சுடக் காப்பியுங் கொண்டுவந்து "மாமா காப்பி குடியுங்கள்" என்று வேண்டினான். அப்பொழுதுதான் அந்த இருவரும் தம்மை உணர்ந்தார்கள்.

 

"மாமா, மதுரமண்ணா எங்கே படிக்கிறான்? அவன் ஸ்கூலால் வந்த பிறகு கூட்டி வருகிறீர்களா? அண்ணாவும் பார்க்கவேண்டும் என்று சொன்னார்; ஏன்> அவன் இங்கேதானே படிக்கிறான்"

"தம்பீ, மாமாவுக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வாரும் அம்மாtpடம்." மீனாக்ஷி உள்ளே தயார்படுத்தி வைத்திருந்த வெற்றிலைத் தட்டுடன் வந்து சேர்ந்தான் மணி.

"மிஸ்ரர் மணியம், என் மூத்த பையன் இருக்கிறானே சிற்றம்பலம்; அவனைக் கொழும்பில் றோயல் கொலீச்சுக்குப் படிக்க அனுப்பலாம் என்றுதான் இருந்தேன்; அவர் பொன்னம்பலமும் சோமரும் சொன்னார் கள்: 'அங்கே வீண்செலவு' என்று; தாங்களும் தங்கள் மக்களை அந்தப் பாதிரியார் பள்ளிக்கே அனுப்பியிருக்கிறார்களாம்; என்னை அங்கேதான் அனுப்பச் சொன்னார்கள். நானும் பார்த்தேன் அது பழுதில்லைப் போலத்தான் இருக்கிறது! முந்தாநாள் அங்கே போனேன் உபாத்தியார் எல்லா இடங்களையும் காட்டினார்; என்ன! ஸயன்ஸ் றூம்- ஜியோக்றபி றூம் ஹைஜீன் றூம் பிறேயர் ஹோல் ! என்ன அழகான டொமிற்றறி! பாத்றூம் ! எல்லாம் என்ன செளகரியம்! இரண்டு பேரையும் அனுப்பினால் ஒன்றரைச் செலவில் படிப்பிக்கி றார்களாம்" இவ்வாறு தாமோதரம் தமது விஷயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டார்.


ஏதோ எனக்கு அவ்வளவு பிடிமானமாக இல்லை; எப்படி இருந்தாலும் அவர்கள் அந்நியர்கள்தானே; தாழ்விலும் கவனிப்பார்களா என்ன; இப்போது பச்சையாய்த்தான் இருப்பார்கள்; பிறகு எப்படிப் போகுமோ யார் கண்டார்? அந்தக் கந்தையா உபாத்தியாயர் ஒரு நல்ல மனுஷன்; அவர் சொன்னார் சொன்னபடி அந்த இந்து கொலீச்சுக்கே மதுரத்தை அனுப்பி இருக்கிறேன்; பாடுபட்டுத் தேடிய பணம் அப்பா! கடவுள்தான்." சுப்பிரமணியம் விடைபெற்றுச் சென்றார். அவருடைய வார்த்தைகளால் தாமோதரத்தின் மனசில் ஒரு மெல்லிய திரை வீழலா யிற்று. அந்தத் திரைக்கூடாகவும், பூர்வபீடிகைகளையே அவர் கண்டார்.