வாழ்வு II - சிறுகதை மூலவர் சி.வைத்தியலிங்கம்
இந்தநிலையில் எல்லா நினைப்புக்களுக்கும் ஒரு முடிவு தேடித்தர வந்ததுபோல அவனுக்கு ஒரு புது வேலை கிடைத்தது. யாரோ ஒரு பெரிய மனிதர் அதைத் தொடங்கினார். உடுக்கத் துணியும், குடிக்கக் கஞ்சியுமில்லாத ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு குருகுலம் தொடங்கப் பட்டது. அதில் அவனுடைய பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து விட்டது. வேண்டுமென்றே அவன் அதை வளர்த்தான் என்றுகூடச் சொல்லலாம். அவனுடைய தொண்டை எல்லாரும் பாராட்டினார்கள்.
அந்த ஏழைக் குழந்தைகளுடைய வளர்ச்சியை நாளுக்கு நாள் பார்க்கும்போதெல்லாம் அவன் பூரித்தான்; அந்த இன்பம் அவனை விடாமல் அங்கேயே அடைத்து வைத்து விட்டது.
வெகுகாலத்திற்குப் பிறகு, ஒருநாள் அவன் வெளிக்கிளம்பினான். வழியில் வரும்போது தூரத்தில் அவளுடைய வீடு தெரிந்தது. பழைய ஞாபகங்கள் ஒருமுறை வந்து மோதின. மெல்லச் சிரித்துக் கொண்டான். மனம் உள்ளே சொல்லியது: "மனிதன் எப்பொழுதும் இயற்கையான உணர்ச்சிகளை அடக்கி அழிப்பதென்பதும் இலேசில் முடிகிற விஷயம் அல்ல"
வாசலிலே திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்று திடமாக முடிவு செய்து கொண்டு வேகமாக நடந்தான். ஆனால்? வீட்டுக்கு முன்னாலே போனதும் தன்னை அறியாமலே திரும்பினான். அவள் வாசலிலே சற்று உள்ளே நின்றாள். அவளைக் கண்டதும் அவனால் தன்னையே சமாளித்து வழிநடத்த முடியவில்லை. அதற்குள் அவள், "ஏது, வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப்பக்கம்?” என்று தொடங்கினாள். "ஆமாம்" என்றது அவனது வாய். கால்கள் அசையாமல் நின்றுவிட்டன.
"உள்ளே வரலாமே" என்று அவள் மறுபடியும் ஆரம்பித்தாள்.
"வேண்டுமானால் வருகிறேன். ஏதாவது அவசியம் உண்டா?" என்று அவன் திருப்பிக் கேட்டான்.
"அவசியமென்ன? பார்த்தேன்; அதனாலேதான் கேட்கிறேன். பிழை என்றால் மன்னித்துக் கொள்ளலாம்தானே."
அவன் பேச்சின்றி உள்ளே சென்று உட்கார்ந்தான்.
அவள் சமீபத்தில் நின்றபடியே கேட்டாள்:
"உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு என்னைப் பார்க்க
வெறுப்பாக இருக்கிறதல்லவா?"
“எப்படிச் சொன்னால் நீ ஆறுதலடைவாய் என்று எனக்குத் தெரியவில்லை."
"என்னிடம் புதிர் போடுகிறீர்கள். இது ஏன்?”
"மறுபடியும் எதற்காக ஒரு நம்பிக்கையை வளர்க்க இச்சைப் படுகிறாய்?"
"இப்பொழுது நான் சுதந்திரமடைந்துவிட்டேன்."
"நான் அடிமையாகிவிட்டேனே!”
"என்னை வருத்தவேண்டும் என்று நீங்கள் வேண்டுமென்றே பொய் சொல்லுகிறீர்கள்”
"நான் ஒருநாளும் பொய் சொன்னதில்லை. சத்தியமே பேசுகிறேன்." அவள் மௌனியாகி நின்றாள்.
"நான் போகலாமா?" என்று, அவன் முடிப்பதற்குள்ளாக, "உங்கள் ஆச்சிரமப் பக்கம் நானும் வரலாமா?” என்று அவள் கேட்டாள்.
"எப்பொழுது வேண்டுமானாலும் நீ தாராளமாக வரலாம். வரவேற்க எத்தனையோ மலர்க் கரங்கள் நீட்டப்படும்."
அவள் பிறகு ஒன்றும் கேட்கவில்லை. வெறுமனே பார்த்தபடி நின்றாள். அவன் எழுந்து வெளியே சென்று மறைந்தான்.
தொடக்கத்தில் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்துப் பல நூறு குழந்தைகள் வந்து சேர்ந்து அங்கே வாழ்ந்தார்கள். ஜனங்களும் நான்> நீ என்று தாராளமாக உதவினார்கள். எல்லாமாக அவனை இடையீடற்ற வேலையில் ஆழ்த்திவிட்டது.
ஒரு சாயந்திரம், குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு நின்றார்கள். அவன் அவர்களைக் கவனித்தபடியே ஏதோ செய்து கொண்டு நின்றான். அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள். எதிர்பாராத அவளது வரவு அவனுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. பிறகு கிட்டப்போய், "ஏன் இந்த நேரத்தில் வந்தாய்?" என்று கேட்டான்.
"இந்த நேரத்தில் வரக்கூடாதா?" என்று அவள் திருப்பிக் கேட்டாள். "எப்பொழுதும் யாரும் வரலாம். காலையில் வந்தால் எல்லா வற்றையும் பார்ப்பது சௌகர்யமாக இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்" என்று அவன் நிறுத்தினான்.
"நாளைக் காலையிற் பார்த்துக் கொள்ளலாம்."
"நல்லது. அப்படியானால் நாளைக் காலை வந்துவிடேன்.” "நான் போக இங்கே வரவில்லை.'
"அப்படியானால்?'
"இந்தக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய 'பாபு'வுக்கும் தொண்டு செய்ய வந்துவிட்டேன்.'
அவனால் அசைய முடியவில்லை. அவளைப் பார்த்தபடியே நின்றான்.
ஈழத்தின் சிறுகதை மூலவர்களில் ஒருவர் சி.வைத்தியலிங்கம் ஆவார். `கலைமகள், ‘கிராம ஊழியன்', 'ஆனந்த விகடன்', 'ஈழகேசரி' முதலான பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மூன்றாம் பிறை’ அல்லயன்ஸ் கம்பனியின் 'கதைக்கோவையிலும், 'பாற்கஞ்சி' 'ஈழத்துச் சிறுகதைகள்' தொகுதியிலும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளைக் கொண்ட தொகுதி 'கங்கா கீதம்' என வெளிவந்துள்ளது.
ரவீந்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். அமரராகிவிட்டார்.