அளவெட்டி கைக்குழந்தை: கைகள், கால்கள் முறிக்கப்பட்டுள்ளன!!! உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி
tamil news: யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ்(வயது 45 நாட்கள்) என்ற குழந்தையே நேற்று(03.08.2024) உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக கூறி குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(03.08.2024) கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது குழந்தை உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
குழந்தையின் தாயை வளர்த்த இருவரையும் குழந்தையின் தந்தையையும் தெல்லிப்பழை காவற்துறையினர் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம்(04.08.2024) மேற்கொண்டநிலையில் குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்ததும்,
தலையில் அடிகாயங்கள் காணப்பட்டதும்,
உடலில் கண்டல் காயங்கள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த குழந்தை தலையில் தாக்கப்பட்டு செயற்கையான முறையில் மரணம் நிகழ்ந்ததாக மருத்துவ பரிசோதனையில் அறிக்கை கூறுகின்றது.
இடம்பெற்ற காவற்துறை விசாரணைகளில்,
குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலேயே குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் தாய், மரண விசாரணை அதிகாரி மற்றும் காற்துறை விசாரணையில்,
"குழந்தை பால் குடிக்க மறுத்ததால் கைகள் கால்களை திருகினேன்.
ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை"
என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தையின் தாயை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குழந்தையின் உடற்கூற்றுப்பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னரே, நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.