மன்னார் சிந்துஜாவின் மரணம்: நீதி கோரி வலுக்கிறது போராட்டம்!
tamil news: மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதிகோரி இன்று(13.08.2024) காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு முன்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடுசெய்திருந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்பு துணியால் தமது வாயைக்கட்டி கையில் கருப்புக்கொடியை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது,
மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் கடந்த மாதம் 28ம் திகதி சிகிச்சைக்காக வருகைதந்திருந்த நிலையில் நோயாளர் விடுதியிலிருந்த வைத்தியர், பணியாளர்களின் அசமந்தபோக்கு காரணமாக உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒருவாரம் கடந்தபோதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும், இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில்,
"பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா? மருத்துவம்",
"அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய்",
"உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள்'"
"மருத்துவத்துறையின் அறம் எங்கே",
"சிந்துஜாவின் மரணம் இறப்பா? கொலையா?",
"நீதி நிழலாடுகிறதா?",
"மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா வைத்தியத்துறை"
போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கநினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆகவே குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்களாக அனைவரும் பணிநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த போராட்டத்தில் குறிப்பாக சிந்துஜாவின் கைக்குழந்தையுடன் சிந்துஜாவின் தாய் கலந்து கொண்டதோடு; பெண்கள் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட் தந்தைமார்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேசமயம் சிந்துஜாவின் மரணத்திற்கு நீதிகோரி வைத்தியர் செந்தூரன் இன்றையதினம்(13.08.2024) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அவர் 'சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.