வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!
tamil news: யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் காவற்துறை நிலையத்திற்கருகில் வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் நேற்று(17.08.2024) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 5 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிள்களையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிக்காவற்துறை மாஅதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறையினால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் 2 மோட்டார்சைக்கிளில் சென்ற 6 பேர் வல்வெட்டித்துறை காவற்துறை நிலையத்திற்கு அருகில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதன்போது சுமார் 3 இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் காவற்துறை விசாரணையின் போது துபாயிலிருந்து வீட்டைத் தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.