தபால்மூல வாக்களிப்பு: புதிய அறிவிப்பு வெளியானது...
tamil news: ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்தவகையில் செப்டம்பர் 4ம் திகதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால்மூல வாக்குகளை வழங்கமுடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரசநிறுவனங்களிலும் தபால்மூல வாக்குகளை வழங்கமுடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் தபால்மூல வாக்குகளை குறித்த நாட்களில் வழங்கமுடியாதவர்கள், செப்டம்பர் 11 மற்றும் 12ம் திகதிகளில் தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால்மூல வாக்குகளை வழங்கமுடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால்மூல வாக்குகளை வழங்க தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என ஏதாவது ஒன்றினை பயன்படுத்தமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அலுவலக அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி யாராவது தபால்மூல வாக்கை வழங்க முன்வந்தால், தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பார் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 54,000 காவற்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் தொடர்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மாஅதிபர் சங்க கரவிட்ட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.