மினி சூறாவளி: புத்தள மாவட்டத்தில் பலபகுதிகளில் தாக்கம்
tamil news: புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நேற்றிரவு(16.08.2024) மழையுடனான மினி சூறாவளிக் காற்றினால் பல மரங்கள் முறிந்துவீழ்ந்ததுடன், பொதுக்கட்டடங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளது.
அதாவது நாடளாவியரீதியில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் நேற்று(16.08.2024) இரவுவேளை 10.30 மணியளவில் திடீரென இடியுடன் கூடிய மழை கடுமையாக பெய்ததுடன், மினி சூறாவளி காற்றும் வீசியுள்ளது.
இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக புத்தளத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
மினி சூறாவளி காரணமாக பாலாவி - கற்பிட்டி பிரதானவீதியிலிருந்த பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன.
பாலாவி, கரம்பை பகுதியில் பிரதான வீதியோரத்தில் நின்ற பெரிய மரம் முறிந்து பிரதான வீதியின் நடுவே வீழ்ந்ததில் அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
மேலும், மினி சூறாவளி காரணமாக கரம்பை தேத்தாப்பொல ஐயனார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் அந்த ஆலயத்தின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஆலய பிரதம குருக்கள் குடும்பத்துடன் தங்கிருந்த வீட்டின் கூரையும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
நேற்றிரவு(16.08.2024) ஐயனார் ஆலயத்தில் வரலட்சுமி பூசை இடம்பெற்ற நிலையில் அந்தப் பூஜையில் பெரும் பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததாகவும், பூசை வழிபாடுகளையடுத்து பக்தர்கள் தமது வீடுகளுக்கு சென்றதன் பின்னரே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ லிங்கேஸ்வரசர்மா தெரிவித்தார்.
இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு சொந்தமான மீன்சந்தைக் கட்டடம், கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபம் என்பனவற்றின் கூரைகள் பகுதியளவில் தூக்கிவீசப்பட்டதாக புத்தளம் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் புத்தளம் உலுக்குளம் வித்தியாலயத்தில் உள்ள மூன்றுமாடிக் கட்டடத்தின் கூரையும் இந்த மினி சூறாவளிக்காற்று காரணமாக சிறிய அளவில் சேதமடைந்திருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இவ்வாறு சேதமடைந்த கட்டிடங்களை புத்தளம் நகரசபையின் செயலாளர் எல்.பி.ஜீ.பிரீத்திகா உள்ளிட்ட நகரசபையின் உத்தியோகத்தர்களும், புத்தளம் நகர சபையின் முன்னாள் நகரமுதல்வரும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளருமான எம்.எச்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் மினி சூறாவளி காரணமாக தமது வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் தமது கிராமசேவகர்களிடம் சேதவிபரங்களை தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.