யானைக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்ட அரச பேரூந்து! முறைப்பாடு பதிவு
tamil news: பாடசாலை ஆசிரியர் ஒருவரை யானைக்காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டுச்சென்றதாக பேரூந்து சாரதி மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்முனை - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு வீதிக்குச் சொந்தமான BN-NC 1554 இலக்கமுடைய பேரூந்து வண்டியில் பயணித்த பின்தங்கிய பிரதேசத்தைச்சேர்ந்த பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவிக்கையில்,
'நேற்றையதினம்(12.08.2024) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக BN-NC 1554 இலக்கமுடைய பேரூந்து வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்துவிட்டது.
அதை நன்கு அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்துவரும் வரை நிற்பதாகச்சொன்னார்.
நான் பையை எடுக்கச்சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்றுவிட்டார்.
உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
அதிக பேரூந்து வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இந்தப்பாதையில், அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச்செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலையென்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?
இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒருசில சாரதிகள், நடத்துனர்களால் ஒட்டுமொத்த அமைப்பிற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேரூந்துகளை நம்பிப்பயணிக்கும் அரச ஊழியர்கள், பொதுமக்களுக்கு அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது'
எனத்தெரிவித்தார்.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப்பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், வாழைச்சேனை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.