தமிழர்கள் அரசியற்தீர்வினை விரும்பவில்லை அபிவிருத்தியைத்தான் விரும்புகிறார்கள்! இராஜதந்திரிகளிடம் அரசு பொய்யுரைப்பு - பா. அரியநேந்திரன்
tamil news: தமிழர்கள் அரசியற்தீர்வினை கேட்கவில்லை எனவும் அபிவிருத்தியைத்தான் அவர்கள் கோருகின்றனர் என்று உலகநாடுகளின் இராஜதந்திரிகளிடம் இலங்கையரசு பொய் சொல்லிவருகின்றதாக ஈழத்தமிழர்கள் சார்பில் தமிழ்ப் பொது வேட்பாளராக களமிறங்கும் பா. அரியநேந்நிரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(29.08.2024) கிளிநொச்சி, வட்டக்கச்சி மாயனூர் கிருஷ்ணர் கோவிலுக்கு முன்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,
"உலகநாடுகளின் இராஜதந்திரிகளை இலங்கையரசு சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர்கள் அரசியற்தீர்வினை விரும்பவில்லை, அபிவிருத்தியைத்தான் விரும்புகிறார்கள் என கூறுகின்றனர்.
நாங்கள் அபிவிருத்தியை நேசிக்கின்றோம் ஆனால் அதைவிட அபிலாசைகள் எங்களுக்கு முக்கியம்,
அதற்காகத்தான் நாங்கள் பல்வேறுபட்ட தியாகங்களை செய்திருக்கின்றோம்.
ஆனால் அவற்றுக்கான விடை எமக்கு கிடைக்கவில்லை.
அதனை பெறவேண்டுமென்றால் நாங்கள் இன்றும் உறுதியுடன் இருக்கின்றோம் என்பதனை வெளிக்காட்ட ஒரு ஜனநாயகரீதியிலான போராட்டவடிவமாக தான் நாங்கள் இந்ததேர்தலை பார்க்கின்றோம்."
என கூறினார்.
அதுமட்டுமன்றி பெரும்பான்மை இனத்திலிருந்து இதுவரை வந்த 8 ஜனாதிபதிகளும் எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்,
இனிமேல் நாங்கள் ஏமாற தயாராக இல்லை என்பதைக்காட்ட எமது மக்கள் துடிப்பாக இருக்கிறார்கள் எனவும்,
அவர்களுக்கு நான் அரசியல் சொல்லித்தர அவசியமில்லை எனவும்,
அவர்கள் களத்துடன் மண்ணுடன் சேர்ந்து அரசியலை படித்தவர்கள் எனவும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.