வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இலங்கையில் தமிழ் பெளத்தம்


பாரத தேசத்தில் இருந்து அசோக மன்னன் உடைய மகள் சங்கமித்தையும்  மகிந்தயும் இலங்கைக்கு தூதுவராக வந்தனர். இவர்கள் அரசமரத்தை கடல் மார்க்கமாக கொண்டு வந்து கரை ஒதுங்கிய இடம் கூட, யாழ்பாணத்தில் தம்பகொலப்பட்டுன என்ற இடம் தான்.


அந்த இடத்தில் இருந்து அநுராதபுரத்துக்கு அரச மரம் கொண்டு செல்லப்பட்டது. அந்த நேரத்தில் தம்பகொலப்பட்டுனவில் வாழ்ந்தவர்கள் ‘’தமிழர்கள்". ஆகவே பெளத்தர்களின் முதல் இலங்கை வருகையிலேயே தமிழர்களுக்கும் பெளத்தத்துக்குமான தொடர்பு ஆரம்பித்து விட்டதாக, இலங்கையின் தமிழ் பெளத்தர்களின் வரலாற்றைக் சில வரிகளில் கூறி முடித்தார், பலாங்கொடை சுதர்மா ராமய விகாரை விகாராதிபதி பகவந்தலாவ ராகுல தேரர்.

 

இலங்கையின் பன்முக கலாச்சாரத்தில் பௌத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், தமிழ் பௌத்தம் தனித்துவமான வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்டது. இலங்கையில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பௌத்தத்தின் பின்னர் 9-10 ஆம் நூற்றாண்டுகளில் பாரதத்தில் இருந்து வந்த தமிழ் பௌத்த துறவிகள் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழ் பௌத்தம் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள  9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்லியல் தளங்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பல  கல்வெட்டுக்கள் சான்றாக திகழ்கின்றன. மற்றும் இது குறித்து 1901 ஆண்டு வெளிவந்த The History of Ceylon" by H. W. Codrington என்ற  நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

13 ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தின் மறுமலர்ச்சி தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதற்கு பின்னர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தமிழ் பௌத்தத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. போர்ச்சூழல் மற்றும் அரசியல் காரணங்களால் தமிழ் பெளத்தம் மழுங்கி போனதில் வியப்பு இல்லை. இதன் காரணமாக பாதிக்கபட்ட தமிழ் பெளத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்.

 

அசோகர் முன் தமிழ் பௌத்தம்? சர்ச்சைக்குரிய வரலாறு

 

"இலங்கை தமிழ் பெளத்தர்கள் என்பது இலங்கையில் வாழ்ந்த பூர்வீக குடிகள்... ஆரம்பத்தில் இயக்கர், நாகர் என்ற குடிகள் வாழ்ந்தார்கள். இதில் நாகர் என்று கூறப்பட்டவர்கள் தான் தமிழர்களாவர். இவர்கள் யாழ்பாண குடா நாடு, மன்னார் , வவுனியா வரை பரவலாக வாழ்ந்தார்கள். பின்னர் கிழ‌க்கு மற்றும் தெற்கு வரையில் பரவி இருந்துள்ளார்கள்.


 

இரா.சடகோபன்

மேலும் தொடர்ந்த, இரா.சடகோபன் (கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி/ சட்டத்தரணி/ ஆய்வுக்கட்டுரை எழுத்தாளர்)

தமிழ் நாட்டில்  அசோக சக்கரவர்த்தி தூதுவர்களாக அனுப்பிய  சங்கமித்தையும் மகிந்தயும் இலங்கைக்கு வர முன்பு  இருந்தே தமிழ் பெளத்தர்கள்  இலங்கையில் வசித்து வந்ததற்க்கு கூட சில ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இது பரவலாக பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பௌத்தம் அசோகரின் காலத்தில் தான் இலங்கைக்கு வந்ததாக  பரவலாக நம்பப்படுகிறது, என தொடர்கிறார்... 


மேலும் தொடர்ந்த அவர் பெளத்த மதத்தின் பிரிவுகளை பின்வருமாறு விவரிக்கிறார்..


“இங்கு தமிழ் பெளத்தம் சிங்கள பெளத்தம் என்று பிரிவுகள் இல்லை. பெளத்தத்தில் மகாயான பெளத்தம் , தேரவாத பெளத்தம், வஜிரயான பௌத்தம் என்னும் பிரிவுகள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு  மகாயான பெளத்தம்  இருந்திருக்கிறது. பின்னர் தேரவாத பெளத்தம் பரவி இருக்கிறது. இதற்கு பின்னர் இலங்கைக்கு தேரவாத பெளத்தத்தை கொண்டு வந்தவர்கள் தான் அசோக சக்கரவர்த்தி தூதுவர்களாக அனுப்பிய  சங்கமித்தையும்  மகிந்தயும்.


அந்த தேரவாத பெளத்தம் இன்று வரையில் காணப்படுகிறது. இடையில் மகாயான பெளத்தம் அனுராதபுர காலத்தில் இருந்த போது அங்கு மகாயான பெளத்தத்துக்கும் தேரவாத பெளத்தத்துக்கும் இடையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு பல விகாரைகள் தீக்கிரையாக்கப்பட்டு மகாயான பெளத்தம் இல்லாமல் அளிக்கப்பட்டமைக்கும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.” என்று தேரவாத பெளத்தத்தின் வீழ்ச்சியை விவரித்தார் இரா.சடகோபன்.

 

இலங்கையில் தமிழ் பெளத்தர்களின் இருப்பு

 

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பெளத்தர்களின் எண்ணிக்கை தொடர்பில் எடுக்கப்படும் கணக்கெடுப்புக்கு சில தமிழ் பௌத்தர்கள் தங்கள் மத அடையாளத்தை மறைத்தல், இலங்கையில் மத மாற்றம் பற்றிய தரவுகளின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அதன் துல்லிய தன்மை மிகுந்த சவாலான ஒரு விடயமாக உள்ளது. எனினும், குடிசன மதிப்ப்பீட்டுத்திணைக்கத்தினால் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய 22254 தமிழ் பௌத்தர்கள் இலங்கையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

(லிங்க் இணைப்பு:- https://tamil.news.lk/news/business/item/10386-22-254)


இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பௌத்தர்களும் 11 தமிழ் பிக்குகளும் அடங்குவதாகவும் புத்தசாசன அமைச்சு தெரிவித்தது.



“ இலங்கையை பொருத்த வரைக்கும் தமிழ் பெளத்தர்கள் இப்போதும் இருக்கிறார்களா? என்று கேள்வி இருக்கிறது! நிச்சயமாக இப்போதும் தமிழ் பெளத்தர்கள் இருக்கிறார்கள்.

 

ஆனால், தமிழ் பெளத்தர்கள் என்று தங்களை அவர்கள் அடையாளபடுத்தாமல் இருக்கின்றார்கள். காரணம் இலங்கை நாட்டிலே தமிழ் பெளத்தத்துக்கும் சிங்கள பெளத்தத்துக்கும் இடையில் தேவை இல்லாத அரசியல் புகுந்துள்ளது. என்பது எனது கருத்து ஆகும். இந்த நாட்டிலே யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இந்த யுத்தத்தால் நெருங்கி வாழ இருந்த தமிழ்-சிங்கள பெளத்தர்களுக்கான பாதைகள் மூடப்பட்டது...

 

பெளத்தம் என்றாலே சிங்கள பெளத்தம் தான் என்கிற ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.. இன்று கூ பார்க்க போனால் சில தமிழ் பெளத்தர்கள் தாங்கள் தமிழ் பெளத்தர்கள் என்று வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். நான் இலங்கைக்கு பல பாகங்களுக்கு  சென்று பெளத்தர்கள் இடையே உரையாடும் போது பலர் என்னிடம் கூறுகின்ற விடயம், நான் தமிழ் பெளத்தர் என்னும் காரணத்தால் என்னை பல இடங்களில் புறக்கணிக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

 

இதே போல் தாங்கள் அவர்கள் ஜாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றார்கள்.. இதற்கு காரணம் இந்த இடத்தில் அரசியல் புகுந்து இருக்கிறது. அரசியல் சாயம் பூசப்பட்டு இருக்கிறது என்று தமிழ் பெளத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விவரிக்கிறார், பகவந்தலாவ ராகுல தேரர்.


பகவந்தலாவ ராகுல தேரர்

மேலும் தமிழ் பெளத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை விவரித்த அவர்,இந்த இடத்தில் தான் தமிழ் பெளத்தம் என்று கூறுவதால் எதிர்காலத்தில்  தனக்கு எதுவும் பிரச்சினை வந்து விடுமோ என்ற அந்த ஒரு பயமும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் தமிழ் பெளத்தர்கள் பயப்படாமல் வெளியே வரவேண்டும். அவர் அவர்களுடைய வாழ்க்கைக்கு தேவையான மார்க்கத்தை பின்பற்றுவதற்கான உரிமை இலங்கையில் இருக்கிறது. எந்த மார்க்கத்தையும் உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் பின்பற்றலாம், அதற்கு சட்டம் கூட இருக்கிறது. எந்த மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுகின்றீர்களோ அந்த மார்க்கத்தை பற்றி தைரியமாக வெளியே நீங்கள் சொல்லலாம். நான் இந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன். இதன்படி தான் வாழ போகிறேன் என்று...


ஆகையால் எதிர்காலத்தில் எங்களது  பயணத்தின் ஊடாக தமிழ் பெளத்தர்கள் பலர் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. எதிர்காலத்திலே அரசியலையும் தாண்டி இந்த நாட்டிலே தமிழ் பெளத்தர்கள் எம்மோடு சேருவார்கள்" என அவர் தெரிவித்தார்.

  

கன்பொல்ல கிராமத்தின் கதை - தமிழ் பௌத்தத்தின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மறுமலர்ச்சி

 

“கன்பொல்ல என்று ஒரு கிராமம் இருக்கின்றது. பெயரை கேட்டவுடன் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள கிராமம் என்று யாரும் நினைக்கக்கூடும். ஆனால் இது ஒரு தமிழ் கிராமம். தமிழ் பௌத்தர்களின் கிராமம். யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் அமைய பெற்றுள்ளது, கன்பொல்ல கிராமம். ஆரம்பத்தில் இங்கு தமிழ் பௌத்தர்கள் வசித்திருக்கவில்லைதான். சாதியால் ஒடுக்கப்பட்ட மரம் ஏறும் தொழிலாளர்களின் கிராமமாக இது அறியப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சாதி தலை விரித்தாடியது. அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டங்களுக்கு மறுக்கப்பட்டன. உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றோடு வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டது.


மறுபுறத்தில் சாதிக்கு எதிரான போராட்டங்கள் மெல்ல மெல்ல தீவிரம் அடையப் பெற்றன. இந்து வர்ணாச்சிரம கோட்பாட்டுக்கு பௌத்த தர்மம் எதிரானது ( இது மனித சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்து ஒவ்வொரு வர்ணத்திற்கும் குறிப்பிட்ட கடமைகள் மற்றும் உரிமைகள் இருப்பதாகக் கூறுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியன அந்த நான்கு வர்ணங்களில் அடங்கும். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு எந்த வர்ணத்தில் என்பதை தீர்மானிக்கிறது. அதாவது, ஒருவர் எந்த வர்ணத்தில் பிறந்தாரோ, அவர் அந்த வர்ணத்தில் வாழ்ந்து மடிய வேண்டும், என்பது இதன் கருத்து)


எனவே, ஒடுக்கப்பட்ட  மக்களின் தலைவர்கள் பௌத்த தர்மத்தின் மீது ஈர்ப்பு கொண்டனர். கொழும்பை சேர்ந்த  பிக்குகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பௌத்த தர்மத்தின் மூலம் மாற்றத்துக்கான திறவுகோலை உருவாக்க தலைப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிக்குகள் புதிய வாழ்க்கையை உருவாக்கி கொடுக்க முன்வந்தனர். குறிப்பாக பாடசாலைகள் கட்டி கொடுக்கப்பட்டன.

 

இவ்வாறு தான் கன்பொல்ல கிராமத்திலும் 1960 களில் பௌத்த தர்ம எழுச்சி ஏற்பட்டது. இங்கு உள்ள அனைத்து குடும்பங்களும் பௌத்த தர்மத்தை தழுவி கொண்டன. இவர்களுக்கென கட்டி கொடுக்கப்பட்ட பாடசாலையில் பௌத்த தர்மம் போதிக்கப்பட்டது. எமது மக்கள் விரும்பிய மாற்றத்தை பௌத்த தர்மம் ஏற்படுத்தி கொடுத்ததால் எமது மக்கள் பௌத்த தர்மத்தை ஏற்று கொண்டனர், பௌத்த வாழ்வியலை பின்பற்றலாயினர்“ என்று கன்பொல்ல கிராம தமிழ் பெளத்தத்தின் எழுச்சி பற்றி விவரிக்கிறார், கன்பொல்ல கிராமத்தை சேர்ந்த தமிழ் பௌத்தரான போதிதாஸ்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது)


மேலும் தொடர்ந்த அவர் வடக்கு பகுதியில் தமிழ் பௌத்தர்கள் எதிர்க்கொண்ட பிரச்சனை பற்றியும், தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சி பற்றியும் பின்வருமாறு கூறுகின்றார்.

 

“ஆனால் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த போது, இரு தலை கொள்ளிகள் போல இக்கிராம மக்கள் நடந்து கொள்ள நேர்ந்தது. பௌத்த துறவுகளுடன் தொடர்புகள் தற்காலிகமாக அதாவது, நீண்ட காலத்துக்கு அற்று போயின. இந்து சமயிகளாகவே இவர்கள் வெளியில் காட்ட வேண்டி ஏற்பட்டது. இவர்களுடைய புதிய தலைமுறையினர் மத்தியில் பௌத்தம் வேரூன்ற முடியாமலும் ஏற்பட்டது. ஆனால் விடுதலை புலிகளின் காலத்துக்கு பிற்பாடு மீண்டும் பௌத்தம் இங்கு துளிர் விட்டு வளர தொடங்கியது. பழைய உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

 

புதிய தலைமுறையினரும் தமிழ் பௌத்தத்தை நேசிக்க தொடங்கினர். கன்பொல்ல கிராம மக்களின் ஆன்மீக தலைவராக இப்போது யாழ்ப்பாணம் நாகவிகாரை பௌத்த பிக்கு விளங்குகின்றார். இவர்களின் நன்மை, தீமை அனைத்திலும் அவருக்கு பங்கு இருக்கின்றது“ என்று கூறி முடித்தார்.

 

விடுதலை புலிகளின் காலத்தில் தமிழ் பெளத்தம் வீழ்ச்சியடைந்ததை பற்றி T.ஜெயராஜ் (ஆவண பட இயக்குனர்) அவர்களிடம் வினவிய போது அவர் அந்த கருத்தை முற்றாக மறுத்தார். தமிழ் பெளத்த வீழ்ச்சி பற்றி ஜெயராஜ் பின்வருமாறு தனது கருத்தை பதிவு செய்தார்.

 

இலங்கையை பற்றி சம்மந்தர் நாயனார்  தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திருக்கேதீச்சரம், திருகோணேஸ்வரம் பற்றி அந்த நூற்றாண்டு காலப்பகுதியிலேயே தேவாரம் பாடி இருக்கிறார். அந்த அளவுக்கு இலங்கையில் சைவம் செழித்தோங்கி இருந்தது. அதனால் பெளத்தத்தால் வட மாகாணத்தில் நிலைகொண்டு இருக்க முடியவில்லை. பெளத்தம்  நிலைப்பதற்கான சுற்றுச்சூழல் வசதியும் அங்கே இல்லாமல் இருந்தது. எனவே அவர்கள் யாழ்ப்பாணத்தில்  இருந்து நகர்ந்து வவுனியா வடக்கு, பின்னர் அனுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ தொடங்கினர்.

 

பிரித்தானியர்கள் இலங்கையை கைப்பற்றும் போதே அதாவது சங்கிலிய மன்னன் காலத்திலேயே சைவ எழுச்சி அதிகளவில் தாக்கம் செலுத்திய காரணத்தால் இங்கு அனேகமான தமிழ் பெளத்தர்கள், பெளத்தத்தை கைவிட்டுவிட்டார்கள். மற்றையது சிங்கள மக்கள் மத்தியில் உருவான தமிழ் வெறுப்புணர்வு பெளத்த தமிழர்களுக்கு எதிரான ஒரு மதம் என்கிற விம்பத்தை உருவாக்கிவிட்டது. இதற்கு மகாவம்சத்தில் உள்ள சில எழுத்து வடிவங்களை கூட உதாரணமாக கூறலாம்.

 

பெளத்தம் பெரும்பான்மையினருடைய மதமாக மாறி வருகிறது. அது எங்களை அழிக்கும் கருவியாக மாறி வருகிறது, என்று உணர்த்த அவர்கள் பெளத்தத்தை கைவிட்டார்கள். பெளத்தத்தை கைவிடாத சில தமிழர்களும் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். இன்று கூட சில பகுதிகளில் பலருக்கு பிறப்பு சான்றிதழில் தமது மூத்த தலைமுறையினரின் பெயர்கள் தமிழ் பெயராக இருப்பதை அவதானிக்கலாம். என தனது கருத்தை கூறி முடித்தார், ஜெயராஜ்.


T. ஜெயராஜ்

அச்சமும் அமைதியும்

 

" இலங்கையில் மலையக தமிழர்களில் பலர் தமிழ் பெளத்தர்களாக இருக்கின்றார்கள். வடபகுதிகளிலும் தமிழ் பெளத்தர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் சிலர் அரசியலுக்கு பயந்து தாங்கள் தமிழ் பெளத்தர்கள் என வெளியில் கூறுவதில்லை. இங்கே மாத்தளை, குருநாகல அப்படி இடங்களிலயும்  தமிழ் பெளத்தர்கள் இருக்காங்க.


பல தமிழர்கள் நினைகிறாங்க சிங்கள சமுதாயத்திற்கு மட்டும் தான் பெளத்தம் சொந்தம் என்று. மற்றயது கீழ் ஜாதி தமிழ்  மக்கள் தான் பெளத்தத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று  அறியாமையில் பலர் கூறுவதுண்டு. அதனாலேயே சில தமிழர்கள் தாங்கள் தமிழ் பெளத்தம் என சொல்வதற்கு பயப்படறாங்க.


நான் போன வருடம் வட பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு ஒரு நிகழ்வுக்கு போக இருந்தேன். அப்போது வட பகுதியில இருக்குற தமிழ் பெளத்தர்கள் நிறைய பேர் என் கிட்ட தொலைபேசி அழைப்பு விடுத்து பேசினார்கள். என்னை வாழ்த்தினார்கள், ஆனால் யாரும் அந்த விகாரை நிகழ்வுக்கு வரவில்லை. எங்களால் வர முடியாது மன்னித்து விடுங்கள் என மீண்டும் அழைப்பை விடுத்து கூறினார்கள். காரணம், அவர்களின் இடையே சிறு பயம் உள்ளது. தாங்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கபட்டு விடுவோமோ, எமக்கு எதுவும் பிரச்சனை வந்து விடுமோ என்று" என தனது அனுபவத்தை பகிர்ந்தார். மாத்தளையை சேர்ந்த தமிழ் பெளத்தரான தர்மசேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 

 

இலங்கையின் பன்முகத்தன்மை மிக்க சமூகத்தில், பௌத்தம் என்பது பெரும்பான்மையான மதமாக இருந்தாலும், அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் சிங்களவர்கள் மட்டுமல்ல. குறிப்பாக, இலங்கையின் மலையகப் பகுதிகள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தமிழ் பௌத்தர்களின் இருப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், பல காரணங்களினால், அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படையாகக் கூற தயங்குகின்றமை, எமது இந்த கள பயணத்தின் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

 

நல்லிணக்கம்

 

இலங்கையில் தமிழ் பெளத்தர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, விரல்விட்டு எண்ணக்கூடிய சில இடங்களில் தமிழ் பெளத்தர்கள் உடனான பிற மதங்களின் நல்லிணக்கம் பற்றி எம்மால் காணமுடிகிறது. இதனை பற்றி தனது கருத்தை தெரிவித்தார் கல்முனை, அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் பெளத்தரான ராகுல டீ சில்வா.


ராகுல டீ சில்வா

“இந்த அம்பாறை மாவட்டம் 3 மத மக்களும் வாழுகின்ற ஒரு மாவட்டமாகும்.

அதிலும் குறிப்பாக கல்முனையில் இரு தமிழ் பெளத்த குடும்பங்களே வாழ்கின்றன. உண்மையை சொல்லனும் என்றால் நான் கல்முனை வந்து இருபது வருடங்கள் ஆகின்ற. என்றாலும் அவர்கள் எங்களை வேற்று மதத்தவர்க்களாக பார்ப்பதில்லை. அவர்களில் ஒருவராக தான் பார்கிறார்கள் எங்களை நல்லபடியாக நடத்துகிறார்கள்.


நாங்க இங்க வந்து குடியேறிய காலப்பகுதியில் பல இனக்கலவரங்கள் நடைபெற்றது, அதில் பல மக்கள் பாதிக்கப்பட்டார்கள், என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஆனாலும் எங்களை புரிந்து கொள்ளக்கூடிய மனிதநேயம் உள்ள மக்கள் இந்த கல்முனையில் இருந்ததால், எங்களை அந்த கலவரங்கள் பாதிக்கவில்லை.. நாங்கள் அக்கா தம்பி சகோதரம் ஒரு தாய் பிள்ளைகள் போல தான் இங்க வாழ்ந்து கொண்டு இருக்குறோம்“ என்று மனிதநேயம் மற்றும் ஒற்றுமை  பற்றி தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து முடித்தார் ராகுல டீ சில்வா.

 

இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்தம் ஒரு பன்முக கலாச்சாரத்தின் ஒளிரும் சாட்சியாகும். இன மோதல்களால் ஏற்பட்ட காயங்கள் ஆற ஆரம்பித்துள்ளன, மக்கள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு புதிய பாதையை நோக்கி நகர தொடங்கி விட்டனர். புதிய தலைமுறையினர் தங்கள் பாரம்பரியத்தை மீண்டும் கண்டறிந்து, பௌத்த மதிப்புகளை தங்கள் வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தமிழ் பெளத்தத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. புதிய தலைமுறையின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன், இந்த பண்டைய மரபு இலங்கையின் பன்முக கலாச்சாரத்திற்கு ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாக தொடரட்டும்.




எழுத்தாளர்

சிறிதர்குமார் நிலுசன்.

யாழ்ப்பாணம்.