தமிழ்ப் பொது வேட்பாளர் வடகிழக்கினை தாண்டி எழுச்சியடையவேண்டிய ஒன்று!!! சட்டத்தரணி உமாகரன் ராசையா
tamil news:
"தமிழ் பொது வேட்பாளருக்கான வாக்குகள் வடகிழக்கிற்குள் மாத்திரம் மட்டுபடுத்தப்படவேண்டிய ஒன்றல்ல.
வடகிழக்கினைத் தாண்டிய தமிழர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளரை அங்கீகரிக்கவேண்டும்."
இவ்வாறு தெரிவித்தார் இனம் சட்டத்தரணியும், இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினருமான உமாகரன் ராசையா.
நேற்றையதினம்(30.08.2024) முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள மாவடி பிள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்ற தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரக்கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதாவது இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 இல் நடைபெறவுள்ளநிலையில் ஈழத்தமிழர்கள் தரப்பில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன் அவர்கள் களமிறங்கியுள்ளார்.
கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த பிரச்சாரப்பயணம், கிளிநொச்சி மாவட்ட மக்களின் அமோக ஆதரவினைத் தொடர்ந்து தற்சமயம் முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் மாங்குளம் மாவடி பி;ள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ்த்தேசிய கொள்கை என்பதற்கு நாம் கொடுத்திருக்கும் மிகப்பிந்திய வடிவமே தமிழ்ப் பொது வேட்பாளர்.
தமிழ்ப் பொது வேட்பாராக களமிறங்கியிருக்கும் அரியநேந்திரன் அவர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் களமிறங்கியுள்ளார்.
தேர்தலுக்கு பின் அவருடைய கட்சியே அவரை ஏற்றுக்கொள்ளுமா என்பதுவே பெரும் கேள்விக்குறிதான்.
இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் மீதுள்ள காதலினாலேயே அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
அந்தவகையில் தமிழ் பொது வேட்பாளருக்கான வாக்குகள் வடகிழக்கிற்குள் மாத்திரம் மட்டுபடுத்தப்படவேண்டிய ஒன்றல்ல. வடகிழக்கினைத் தாண்டிய தமிழர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளரை அங்கீகரிக்கவேண்டும்."
என குறிப்பிட்டார்.
மேலும்,
"பெற்றோர்கள் பிள்ளைகளுடன் தமிழ்த்தேசியம் குறித்து உரையாடவேண்டும். பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்கும் பொன்னும், மண்ணும் மாத்திரம் போதுமென்பது இல்லை. வரலாறுகளை கடத்துங்கள்."
என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.