ஏப்ரல் 21 தாக்குதல் - நீதி கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
tamil news:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு வருடங்கள் நிறைவடைய ஒரு மாதம் இருக்கும் நிலையில் கொழும்பு, புத்தளம் பிரதான வீதியில் கட்டுவப்பட்டிய சந்தையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அமைதிவழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
திட்டமிட்டவர்கள், சூத்திரதாரிகள், கொலையாளிகளை உடன் வெளிப்படுத்த எனும் தொனிப்பொருளில் நீர்கொழும்பு பிரஜைகள் முன்னணி ஏற்பாடுசெய்த இந்த ஆர்ப்பாட்டத்தில்,
"ஆணைக்குழு பரிந்துரைகளை உடனே வெளிப்படுத்து", "உயிர்த்த ஞாயிறு கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்.", "அரச பலத்தை பெற்றுக்கொள்ள ஒருங்கே திட்டமிட்ட படுகொலையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்", "ஆணைக்குழுக்கள் மேலும் வேண்டாம்; உண்மையை உடனே வெளிப்படுத்து", "உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நீதி இன்னும் தாமதம்", "ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சகல பிரிவுகளையும் பகிரங்கப்படுத்து" போன்ற வாசகங்களை கொண்ட அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
"ஒரு அரசாங்கம் படுகொலை செய்தது; இந்த அரசாங்கம் அதனை அப்படியே வைத்துள்ளது.
அரசாங்கத்திடம் தகவல்கள் உள்ளன.
ஏன் இன்னும் சூத்திரதாரிகளை கைதுசெய்யவில்லை அறிக்கையின் அடிப்படையில் கைதுசெய்யலாம், நீதிமன்றம் செல்லலாம்.
தயவுசெய்து ஜனாதிபதியிடம் கேட்பது ஆறு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும்,
குற்றவாளிகளுக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுங்கள்.
தேர்தல் காலத்தில் நடுவீதியில் கூறினார்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கட்டாயம் நியாயத்தை பெற்றுத் தருவதாக இன்னும் ஏன் மௌனம்?"
என வினவினர்.