பாலியல் வன்புணர்வு சந்தேகநபரின் சகோதரியும் கைதாக, பல தகவல்கள் வெளிச்சத்திற்கு!
tamil news:
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் மீது இடம்பெற்ற பாலியல் வன்முறை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கல்நேவ, நிதிகும்பாய பகுதியில் இருந்து நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காவற்துறை சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு நடவடிக்கையில் அவர் பிடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர் மீது விசாரணைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.
காவற்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி,
வைத்தியசாலைக்கு எதிரே உள்ள ஒரு கடையில் இருந்தபோது,
குறித்த வைத்தியரைப் பார்த்து பின்தொடர்ந்து சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், வைத்தியரின் அலுவலகத்திலிருந்து கையடக்க தொலைபேசி மற்றும் பணப்பையை திருடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரால் திருடப்பட்ட பணப்பை மீட்கப்பட்ட நிலையில்,
அதில் 120 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும்,
ஆனால் கையடக்க தொலைபேசி இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணையில் சந்தேகநபர் முன்னதாக இராணுவத்தில் பணியாற்றியிருந்தவர் என்றும்,
பின்னர் சேவையிலிருந்து தப்பிச்சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவரது செயல்பாடுகளுக்காக பல்வேறு இடங்களில் காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் சந்தேகநபரின் சகோதரி உட்பட மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,
அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.