தமிழரசுக்கட்சி தொடர்பில் போலி செய்தியாம்! குமுறுகிறார் குகதாசன்
tamil news:
"திருகோணமலை மாநகரசபை முதல்வர், உப்புவெளி பிரதேசசபை தவிசாளர், வெருகல் பிரதேசசபை தவிசாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியை தொடர்புபடுத்தி முகநூலில் வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது."
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை குச்சவெளி பகுதியின் நாவற்சோலை கிராமத்தில் உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்களை அறிமுகம்செய்யும் நிகழ்வு கடந்த 26.03.2025 மாலை இடம்பெற்றது.
அந்நிகழ்வின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“திருகோணமலை மாநகரசபை முதல்வர், உப்புவெளி பிரதேசசபை தவிசாளர், வெருகல் பிரதேசசபை தவிசாளர் தொடர்பில் எந்தவொரு முடிவுகளும் எடுக்கப் படவில்லை.
முகநூலில் வெளிவந்ததாக கூறுவதும் ஒரு போலியான செய்தியாகத்தான் இருக்க வேண்டும்.
எந்தவொரு சபையினுடைய தலைவரையும் தமிழரசுக்கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ தெரிவுசெய்ய இயலாது.
தேர்தல் முடிவடைந்த பின் அந்த சபையில் தெரிவுசெய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களது ஆதரவைப் பெறுபவரே அபைத்தலைவராக உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்படுவார் என்பதை பள்ளி மாணவர்கள் கூட அறிவார்கள்.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வெற்றிவாய்ப்பு தங்கள் முன்னால் பிரகாசமாக இருக்கின்றது”
என்றார்.