தமிழர் பிரதேச காணிகளை விடுவிக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்!
tamil news:
தமிழர் பூர்வீக காணிகளை துறைமுக அதிகார சபை கைப்பற்றியிருப்பதை கண்டித்து,
அவற்றை மீண்டும் அங்கு வாழும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், திருகோணமலை, கருமலையூற்று, நாச்சிக்குடா, சின்னமுள்ளசேனை மற்றும் முத்துநகர் ஆகிய இடங்களில் காணிகள் துறைமுக அதிகார சபையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவை அங்கு பல தலைமுறைகளாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உரிமைக்கும் பேராபத்தாக உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில், முத்து நகர் பகுதியில் துறைமுக அதிகார சபை அதிகாரிகள் நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றபோது,
இதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலையிட்டு சமரச முயற்சி மேற்கொண்டதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.
1984 ஆம் ஆண்டு முதல் இந்த காணிகள் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளநிலையில்,
அங்கு வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் கூட அமைக்க முடியாத நிலையிலிருக்கின்றனர்.
குறிப்பாக சின்னமுள்ளசேனை, குடாக்கரை, மற்றும் முத்து நகர் பகுதிகளில், வர்த்தகத் திட்டங்களுக்காக காணிகளை வழங்கும் முயற்சிகள் நடந்துள்ளதை அவர் கண்டனம் செய்தார்.
முன்னாள் துறைமுக அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுடன் இது தொடர்பாக உரையாடியதாகவும்,
காணிகளை மீண்டும் மக்களுக்கே வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.
“இத்தகவல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தாலும்,
மக்களின் உணர்வுகளை கருத்திற்கொண்டு அரசும் துறைமுக அதிகார சபையும் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த காணிகளை மீட்டளித்து, அங்கு வாழும் மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்”
என அவர் வலியுறுத்தினார்.