ரணில் - அல்ஜசீரா நேர்காணலில் வாக்குவாதம்! வெளியேற முயன்ற ரணில்
tamil news:
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஆறு முறை பிரதமராக பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க,
அல்ஜசீரா ‘Head to Head’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட நேர்காணலில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அதேநேரத்தில்,
2019 இல் இலங்கையை அதிர்ச்சியடையச் செய்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அரசாங்கத்துடன் உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகளை விசாரிக்கத் தவறியதென எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.
இந்த நேர்காணல் நடந்து 8 நிமிடங்களில், விக்ரமசிங்க அதிலிருந்து வெளியேறுவதாகக் கூறிய போதிலும், பின்னர் தொடர்ந்தார்.
அவர் மீது 1980களில் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சிவில் போருக்குப் பின் நடந்த போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் மீதான சட்டநடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிய கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.
"என் நாட்டில் சட்டநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றால்,
அது அரசியல் தொடர்பில்லாத சட்டமா அதிபரின் முடிவாக இருக்கும்.
நாங்கள் எங்களால் முடிந்த ஆதாரங்களை அவரிடம் வழங்கலாம்"
என விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்சவை காப்பாற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு திரும்ப அனுமதித்ததன் பின்னணி பற்றி,
"அவர் திரும்பலாம். அவர்மீது எந்த குற்றச்சாட்டு இல்லை.
நான் எப்படி தடுப்பது? நான் ஆளாட்சி முறைக்கு விரோதமான ஆட்சியாளர் அல்லவே?"
என அவர் விளக்கம் அளித்தார்.
2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசாங்கத்துடன் உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வி எழுப்பிய போது,
"இவை அனைத்தும் மொத்தமான அரசியல் பிரச்னைகளே.
இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் அபத்தமாக பேசுகிறார்"
என அவர் தெரிவித்தார்.
மறுபடி கேள்வி எழுப்பிய நிருபர் மெஹ்தி ஹசன்,
"இலங்கையின் கத்தோலிக்க தலைவர் அபத்தமாக பேசுகிறார் என்கிறீர்களா?"
என கேட்டதற்கு,
"ஆமாம்"
என விக்ரமசிங்க பதிலளித்தார்.
சிவில் போர் குறித்த உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக,
"இன்னும் எந்த சமூகத்திற்கும் நீதியளிக்கப்படவில்லை"
எனவும், போரின் போது மருத்துவமனைகள் குண்டுவீசப்பட்டதாக ஒப்புக்கொண்டதுடன்,
"அத்தகைய தாக்குதல்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், இது திட்டமிட்ட முறையில் நடந்ததா என்றால், நான் அப்படி சொல்ல மாட்டேன்"
எனவும் கூறினார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் குறித்து, அவரை இராணுவத்தளபதியாக மீண்டும் நியமித்ததற்கான காரணமாக,
"தேர்தலின் போது இராணுவத் தளபதிகளை மாற்றாமல் இருப்பது வழக்கம்"
எனக் கூறினார்.
1980களில் நடந்ததாகக் கூறப்படும் பத்தலந்தை சிறைமறியல், சித்திரவதை, மற்றும் கொலை குறித்த விசாரணை அறிக்கைகள் தொடர்பாக,
"அவற்றை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை"
எனவும்,
"என்னிடம் எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை"
எனவும் வாதிட்டார்.
தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின்போது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்ற பாதையில் கொண்டு வந்ததாகவும்,
"நான் இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தை நிலைநிறுத்தினேன். ஆனால் அது கடினமானது. இதனால், தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்"
என விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவருடன், முன்னாள் பிபிசி இலங்கை நிருபர் பிரான்சிஸ் ஹாரிசன், பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்ஜ் தேவா, மற்றும் மனித உரிமை அமைப்பு PEARL இயக்குநர் மதுரா ராசரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.
அல்ஜசீரா 'Head to Head' நிகழ்ச்சி மார்ச் 6, GMT 1200 மணிக்கு ஒளிபரப்பாகும்.