உள்ளூராட்சித்தேர்தல்: பிரிந்த கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு!
tamil news:
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கூட்டணியில் இணைவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் 'பிள்ளையான்' என்று அறியப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் 'கருணாம்மான்' என்று அறியப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்றையதினம்(22.03.2025) கைச்சாத்திட்டுள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும்,
சதாசிவம் வியாழேந்திரனின் முற்போக்கு தமிழர் கழகமும் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இதில் தற்போது 'கருணாம்மான்' என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர்தேசிய சுதந்திர முன்னணி இணைந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டக்களப்பிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிள்ளையான் என்று அறியப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,
"தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை கருத்திற்கொண்டு தங்களது இரு தரப்பும் இணைந்துள்ளது."
என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த கருணாம்மான் என்ற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,
"போலி தமிழ்த்தேசியவாதிகளை மக்கள் தற்போது புறக்கணிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலும் அந்தநிலை உருவாக வேண்டும்."
எனவும் குறிப்பிட்டார்.