அனு. வைத்தியர் மீதான பாலியல் வன்கொடுமை: நாடு முழுவதும் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!!!
tamil news: அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் குற்றச்செயலுக்கு இலக்கானதை எதிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் இன்றையதினம்(12.03.2025) காலை 8 மணி முதல் நாளையதினம்(13.03.2025) காலை 8 மணி வரை நீடிக்கவுள்ளது.
ஆனால் இதன்போது அவசரசிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாது என்றும்,
ஆபத்தான நோயாளிகளுக்கான சிகிச்சை வழக்கம் போன்று தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குழந்தைகள் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ வைத்தியசாலைகள் இந்த வேலைநிறுத்தத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த திங்கட்கிழமை(10.03.2025) இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது பணிக்கான பொறுப்புகளை முடித்துவிட்டு தங்குமிடத்திற்குச் சென்ற பெண் வைத்தியர்,
அடையாளம் தெரியாத நபரால் மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகக் கூறப்படுகின்றது.
இதுகுறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்,
குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் எனவும்,
அவரைக் கைதுசெய்ய தனிக் காவற்துறை குழுக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.