அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!
tamil news:
மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்றையதினம்(26.03.2025) புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய நபர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்து மட்டக்களப்பு மாமாங்கம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு நித்திரைக்கு படுக்கையறைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரை விட்டெழவில்லை எனவும்,
அவரை எழுப்ப முற்பட்டபோதே அவர் உயிரிழந்தமை தெரியவந்தது எனவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.