தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை – 2 இலட்சம் இருந்தால் காப்பாற்றலாம்!
tamil news:
ஐக்கிய அரபு இராச்சித்தின் அஜ்மான் பகுதியில், கண்டியை சேர்ந்த தெய்வேந்திரன் நிக்லஸ் என்ற தமிழ் இளைஞன் கொலைக்கான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனையை சந்திக்கவேண்டிய நிலையில் உள்ளார்.
இந்த வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்ததாகவும்,
இளைஞன் குற்றவாளி அல்ல என்றும்,
அவர் காயமடைந்த ஒருவருக்கு உதவ முற்பட்டதற்காகவே தண்டனையை சந்திக்கிறாரென்றும் அவரது சட்டத்தரணி சகாப்தீன் தெரிவித்துள்ளார்.
அதாவது சம்பவ நாளில்,
முஸ்லிம் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
அச்சமயத்தில் நிக்லஸ் அந்த கத்தியை அவரது வயிற்றிலிருந்து அகற்றி துணியால் காயத்தை கட்டியபடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இருப்பினும், அத்துயரச்சம்பவத்தில் அவர் உயிரிழந்ததையடுத்து நிக்லஸின் கைரேகை கத்தியில் இருந்ததையடுத்து அவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்த மூன்று சிங்கள இளைஞர்கள் சில நாட்களிலேயே இலங்கைக்கு திரும்பியதுடன்,
உண்மையான குற்றவாளி என கூறப்படும் பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், முக்கிய ஆதாரங்களின்றி நிக்லஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவே அவரது வழக்கறிஞர் கூறுகின்றார்.
தற்போது மரண தண்டனையை தவிர்க்க, இரண்டு இலட்சம் டிர்ஹாம் தொகையை செலுத்தவேண்டிய நிலை(blood money) ஏற்பட்டுள்ளது.
இளைஞனின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் உள்ளது.
அவரது தாயார் ஓமானில் வேலை பார்த்து வருகின்றார்.
நிக்லஸின் தங்கை தற்போது அஜ்மானில் இருக்கின்றார்.
இந்நிலையில் இவரது குடும்பத்தை ஆதரிக்கக்கூடிய நன்கொடையாளர் அல்லது சமூக ஆர்வலர்கள் உதவ முன்வரவேண்டும் என வழக்கறிஞர் சகாப்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிக்லஸின் உயிரைக் காப்பதற்கான நிதி தொகையை திரட்டும் கால அவகாசமாக மூன்று மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்துக்குள் பணம் திரட்டப்படாவிட்டால், மரண தண்டனை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான நிலைமையை வைத்து 'blood money' என்கின்ற படம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.