குளம் உடைக்கும் முயற்சிக்கு எதிராக மக்கள்போராட்டம்!!!
tamil news:
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவில், பாலர்சேனை பகுதியில் அமைந்துள்ள சங்குல்குளம், சில தனிநபர்களால் முறியடிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் 21 ஏப்ரல் 2025 அன்று செங்கலடி பிரதேசசெயலகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
இலுப்படிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செங்கலடிசந்தி பிரதான வீதியிலிருந்து பேரணியாக பயணித்து, செயலகத்திற்கு முன் கலகக்குரலுடன் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
பின்னர் செயலக வளாகத்திற்குள் நுழைந்து தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“குளம் உடைப்பை நிறுத்துக”,
“எங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குக”,
“அரசாங்கம் எங்களை நசுக்காதே” எனப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறே அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தின்போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.ஸ்ரீநாத், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளரான என்.திலகநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.
இதனுடன் செங்கலடி பிரதேசசெயலர் கே.தனபாலசுந்தரம் நேரில் வந்து மக்கள் எழுப்பிய கவலையை கேட்டதோடு, சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசித்து முறையான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கையை கொண்ட மனுவை அலுவலரிடம் கையளித்து அமைதியாக கலைந்தனர்.