சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது 'வயம்ப டஸ்கர்ஸ்'
tamil news:
நீர்கொழும்பு மூவர்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகள் கொண்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் 'வயம்ப டஸ்கர்ஸ்' கிரிக்கெட் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துச் சென்றது.
12 அணிகள் பங்குபற்றிய இந்தத்தொடரின் இறுதிப்போட்டி நீர்கொழும்பு திம்பிரிகஸ்கொட்டுவவில் அமைந்துள்ள மாரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டிக்கு குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 'வயம்ப டஸ்கர்ஸ்' அணியும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 'நேட்டிவ்' கிரிக்கெட் கழகமும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற 'வயம்ப டஸ்கர்ஸ்' அணி முதலில் துடுப்பெடுத்தாடி 100 பந்துகளுக்கு முகங்கொடுத்து 08 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றனர்.
இதில் அணித்தலைவர் சரோத் 20 பந்துகளுக்கு 34 ஓட்டங்களையும்,
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜஃப்ரான் 20 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 'நேட்டிவ்' கிரிக்கெட் கழகம் 100 பந்துகளை முகங்கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர்.
இதில் 'வயம்ப டஸ்கர்ஸ்' அணி சார்பாக முஸர்ரஃப் 03 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.
இத்தொடரின் முடிவில் சாம்பியன் பட்டத்தை சுவிகரித்துக் கொண்ட 'வயம்ப டஸ்கர்ஸ்' கழகத்திற்கு சுமார் 250,000 ரூபாய் பணப்பரிசும் பெறுமதியான வெற்றி கேடயமும் வழங்கப்பட்டது.
மேலும் இப்போட்டியினதும் தொடரினதும் சிறப்பாட்டக்காரனாக முஸர்ரஃப் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.