சட்டவிரோத மதுவிற்பனைக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பு – வீடுகளுக்கு முன்னால் பதாதைகள் ஒட்டினர்!!!
tamil news:
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கபுரம், இளங்கோபுரம் மற்றும் வள்ளவர்புரம் கிராம மக்கள் தங்கள் பகுதியிலே அதிகரித்துவரும் சட்டவிரோத மதுபான விற்பனையை நிறுத்துமாறு கோரிக்கையுடன் இன்றையதினம்(06.04.2025) காலை 10.00 மணியளவில் மாணிக்கபுரம் கிராம அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“மதுவை ஒழிப்போம் – மக்களை காப்போம்”, “ஊரை அழித்து வாழாதே”, “உழைத்து வாழ பழகு” உள்ளிட்ட எழுச்சி முழக்கங்களுடன் பதாதைகளைத் தாங்கியவாறு மக்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இவர்கள் தெரிவிக்கையில், கிராமத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து விற்பனைசெய்யும் சிலரது வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவர்களை எச்சரிக்கும் வகையில் அந்த வீடுகளின் முன்பாக பதாதைகள் ஒட்டப்பட்டதாகவும்,
இவ்வாறு மதுவிற்பனையை உடனடியாக நிறுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை, கிராம சேவகர் வாயிலாக பிரதேச செயலாளர் மற்றும் காவற்துறை நிலைய அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அனுப்பவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.