வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலுக்கு அரசு அனுமதி? கூறுகிறார் இ. முரளிதரன்
tamil news:
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கடற்றொழிலாளர் சங்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர் இ. முரளிதரன் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
இன்றையதினம்(06.04.2025) தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது,
“மார்ச் 4ம் திகதி தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிலர், தங்களுக்கு ஆதரவானவர்களை அழைத்து யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்களம் மூலம் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுத்தந்துள்ளதாக மக்கள் சிலர் எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தும் வகையில்,
அந்தக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பகுதி இணைப்பாளர் மக்கள் முன் விளக்கம் வழங்கவேண்டும்.
சிலருக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பெயரில் அவர்கள் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்குவந்த தேசிய மக்கள் சக்தி தற்போது தேர்தல் அரசியலுக்காகவே இத்தகைய நடவடிக்கைகளை ஏற்படுத்துவதாக தோன்றுகின்றது.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றது போன்று இது காணப்படுகின்றது,”
என அவர் தெரிவித்துள்ளார்.