செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் அரசாங்கம் தயக்கம் – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
tamil news:
தமிழ்மக்கள் எதிர்கொண்ட மாபெரும் இழப்புகள் மற்றும் இனவழிப்புகளை மறைக்கும் நோக்கத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இராணுவத்தினால் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளநிலையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் அரசாங்கத்தால் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் இரவுநேரங்களில் இராணுவ வாகனங்கள் மூலம் மறைவாக அகழ்வு நடந்ததாகவும் பின்னர் அதற்கான சாட்சிகளை அழிக்க முன்னாள் அரசாங்கங்கள் முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய தேசிய மக்கள்சக்தி(JVP) அரசாங்கமும் சமீபத்தில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை அகழ அனுமதி வழங்குவதில் இழுபறி காட்டுகின்றது.
இந்த அகழ்வுக்கான செலவாக குறைந்த தொகையான 20 இலட்சம் ரூபாய்கூட வழங்க அரசு தயங்குகின்றது என்பது சோகமான விடயம் என அவர் கூறினார்.
மேலும் இந்த அகழ்வுப்பணிகளை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட தமிழ் பேராசிரியரை நீக்கும் வகையிலான அரச முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் உள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகம் குறித்து தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கியுள்ளனர் எனவும்,
இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களுக்கெதிராக செயல்பட்ட இந்த இயக்கம் தற்போது பெயரை மாற்றியும் அதே நோக்கத்தோடு செயற்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பட்டலந்த குடியிருப்பு நிகழ்வும் இதற்கு ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு.
அங்கு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்கான விசாரணைகளை சர்வதேச அளவில் இணைக்கவுள்ளதாக கூறும் தேசிய மக்கள் சக்தி,
ஆட்சியைப் பெற்று ஆறு மாதங்கள் கடந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இனவழிப்புகளையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை தமிழ் மக்கள் நன்கே புரிந்துகொள்கிறார்கள்.
இந்நிலையில் தமிழர்களின் எதிர்ப்பு வலுப்பெறும் காலம் ஆரம்பித்துவிட்டது என்றும்,
தேசிய மக்கள் சக்தியை நிரந்தரமாக நிராகரிக்க தமிழ் மக்கள் தயார்நிலையில் உள்ளனர் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.